இலங்கையில் சூரிய சக்தி மற்றும் விவசாயத் திட்டங்களில் கொரிய முதலீடுகள்....

தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில்முயற்சியாளர்களில் ஒருவரான யோங்-ஜோ மூன் அவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதில் விருப்பம் தெரிவித்த திரு. யோங்-ஜோ முன், அவர் தலைமை வகிக்கும் சர்வதேச பரிவர்த்தனை அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்த தொழில்முயற்சியாளர்கள், இலங்கையில் பல சூரிய சக்தி திட்டங்களிலும், பழச் செய்கைகளிலும் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்..

இலங்கையில் பழச் செய்கையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த நாட்டிலிருந்து கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்யும் எண்ணம் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் துறைகளில் முதலீட்டு முன்மொழிவுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்த பிரதமர், மாற்று எரிசக்தி மூலங்களை நாடுவதன் மூலம் மசகு எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மீன்பிடி, சுகாதாரம் மற்றும் நிர்மாணத் துறைகளில் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் புதிய தொழில்நுட்பத்தில் சாத்தியமான முதலீடுகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

சங்கைக்குரிய வேதண்டே ஜினரதன தேரர், யொங்-ஜோ மூன், திருமதி.மூனி என்ஜியோ, லக்பிரிய அத்துகோரள மற்றும் திருமதி.சுதர்மா குலதுங்க தலைமையிலான கொரிய தூதுக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு