தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன...
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் திருமதி கார்மென் மொரேனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (2024.08.27) அலரி மாளிகையில் சந்தித்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் ஜோஸ் இக்னாசியோ சான்செஸ் அமோர், தனது கண்காணிப்பு பணியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் 2022 இல் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஜனநாயகத்திற்கு புதிய பலத்தை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார். ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து, இலங்கை சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதற்கு இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரமானதும் நிதியானதுமான தேர்தலுக்கு அரசாங்கத்தின் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சுயாதீனமான நிறுவனம் எனவும் தேர்தல் தொடர்பான அனைத்து தீர்மானங்களும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் ஏனைய விடயங்களை ஆணைக்குழுவினால் செய்ய வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு முன்னர் ஆறு தடவைகள் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், கடைசியாக 2019 ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றியுள்ளது. இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு நெறிப்படுத்தல் பணிகள் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அனைவரின் பங்கேற்பையும் அர்ப்பணிப்பையும் உறுதிசெய்வதுடன், அமைதியான தேர்தலாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் திருமதி கார்மென் மொரேனா தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை பார்வையிட நாடு முழுவதும் 26 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது. தேர்தல் முடிந்த உடனேயே இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு அதன் பின்னர் முழுமையான அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும்.
பொருளாதார நிலைமை குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடியதுடன், பொருளாதார நெருக்கடியின் போது ஸ்பெயின், கிரீஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டவரான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவர் திரு. ச்சேஸ் அமோர், பிரதமர் குணவர்தனவின் அரசியல் வாழ்க்கைப் பற்றி தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், 2012 இல் ஸ்பெயின் மன்னர் அப்போதைய அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கிய "Orden de Isabel" விருது அவரது நாடு வழங்கும் உயர்ந்த விருது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
இந்த தூதுக்குழுவில் பிரதித் தலைமை கண்காணிப்பாளர் இன்டா லீஸ், அரசியல் ஆய்வாளர், ரால்ப்-மைக்கேல் பீட்டர்ஸ் மற்றும் ஊடக அதிகாரி மரேக் ம்ராகா ஆகியோர் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஆலோசகர் சுகீஸ்வர சேனாதிர, ஒருங்கிணைப்பு செயலாளர் கலன கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு