பயிற்றுவிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களுக்கு சவூதி அரேபியாவில் பல தொழில் வாய்ப்புக்கள் உள்ளதாக சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் கூறினார்.

பொருளாதார மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் சவூதி அரேபியாவிற்கான புதிய தூதுவரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
நேற்றைய தினம் தனது உறுதிப்பத்திரத்தை சமர்ப்பித்த தூதுவர் Khalid bin Hamoud Nasser Aldasam Alkahtani அவர்கள் கூறுகையில், பயிற்றுவிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களுக்கு தமது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல் தமது பிரதான செயற்பாடாகும் எனக் கூறினார். வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 16) பிரதமரைச் சந்தித்த தூதுவர், குறுகிய காலத்தில் சவூதி அரேபியாவில் உள்ள பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பகுதி பயிற்றுவிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களை 180,000 தொடக்கம் 400,000 வரை அதிகரிக்க முடியும் என மேலும் கூறினார்.
"இலங்கைத் திருநாட்டை நான் அன்பு செய்வதுடன் உங்களது நாட்டிற்கு நான் உயர்ந்தபட்ச உதவிகளை வழங்க தயாராகவுள்ளேன்." எனவும் உறுதியளித்தார். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு இலங்கை திரும்புவதே சவூதி அரசின் எதிர்பார்ப்பாகும். முதலீட்டு சபையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நெகிழ்ச்சியான வீசா நடைமுறைகள் மற்றும் முதலீடுகளை இலகுவாக்கும் திட்டங்கள் மூலம் சவூதி முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு கொணர முடியுமென இதன்போது பிரதமர் கூறினார்.
வலுசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் முதலீடு செய்வதற்கு சவூதி அரேபியாவிற்கு கூடுதலான சந்தர்ப்பங்கள் உண்டெனவும் பிரதமர் கூறினார். அத்தோடு
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் புதிய உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு லழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் சவூதி விமானச் சேவையின் ஊடாக இலங்கைக்கான விமானச் சேவைகளை மீள ஆரம்பிக்கும் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் பிரதமரது செயலாளர் அநுர திசாநாயக்க மற்றும் சவூதி இலங்கை நட்பு சங்கத்தின் நகீப் மவுலானா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.