மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மாவட்டச் செயலாளர்கள் ஒரு உத்தேச திட்டத்தைக் கூட சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய பிரதமர், திட்டங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழு இன்று (12.05.2023) அலரி மாளிகையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துதல், அந்த நிறுவனங்களின் நிதி ஏற்பாடுகளை முகாமைத்துவம் செய்தல், சகல நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் மற்றும் முறைமைகள் இக்குழுவின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளைக் கண்டறிந்து, உத்தேச மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை விரைவில் குழுவுக்கு அனுப்புமாறு கூறிய பிரதமர், அதற்கு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் மற்றும் வளங்கள் பற்றிய தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் கூட்டுதல் மற்றும் கூட்டாதிருத்தல் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதிக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஆளுநர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அத்தகைய அதிகாரிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாத அதிகாரிகள் என ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தக் குழு தாபிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க, நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜானக வக்கும்புர, ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்கள், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே. டி. என்.ரஞ்சித் அசோக உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.