செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் புதிய மைக்ரோசொப்ட் திட்டம்...

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, குறிப்பாக கல்வி மற்றும் சமூக நலன்புரி போன்ற துறைகளில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்களிப்புக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் புனித் சந்தோக் (Puneet Chandok) தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு 2024.03.19 அன்று கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் மைக்ரோசாப்ட் மேற்கொண்ட பயணம் குறித்து, கடந்துவந்த மைல்கற்கள், செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் தேசிய பொருளாதாரம், தொழில்நுட்பத் துறை மற்றும் சமூக நலன்புரித் திட்டங்கள் மீதான ஒட்டுமொத்த தாக்கத்தை மையமாகக் கொண்டு திரு. புனித் சந்தோக் பிரதமருக்கு விளக்கினார். எதிர்கால சவால்களுக்கு இளைய தலைமுறையை தயார்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை ஒருங்கிணைப்பதன் மூலம் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான தனது அண்மைய திட்டத்தையும் அவர் விளக்கினார். இந்த முன்னோடித் திட்டம் தற்போது 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அறிமுகப்படுத்தியதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் இலங்கையில் தொடர்ச்சியான வலுவூட்டலுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் மூலோபாயத் திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்ற முயற்சிகள் குறித்து பிரதிநிதிகள் குழு கவனம் செலுத்தியது. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அபிவிருத்தியின் சாத்தியமான துறைகளில் இலங்கையை ஒரு பிராந்திய தொழில்நுட்ப மையமாக ஆக்குவதற்கு மைக்ரோசொப்ட் எவ்வாறு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது என்பதையும் அவர்கள் கலந்துரையாடினர்.

மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் குழுவில் நாட்டின் முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனிய, தெற்காசிய தலைவர் சாமிக் ராய், பிராந்திய கல்விப் பிரிவுத் தலைவர் லெரி நெல்சன் மற்றும் பணியகத்தின் தலைவர் சக்ரி ஷெனு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு