விவசாயிகள் அரச துறையில் உள்ளவர்கள் அல்ல. எனினும் அவர்கள் நாட்டுக்கு செய்யும் பெரும் பங்களிப்பை விலை மதிக்க முடியுமா?
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (2024.07.12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசியும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-
யாழ் குடாநாட்டின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உள்ளூராட்சி நிர்வாக பகுதியில் கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான விசேட ஏற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளோம். பிரதமர் என்ற வகையில் நீங்கள் அனைவரும் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவதானிக்கவும், வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நாம் இன்று இருக்கும் இடத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பெறவும் இங்கு வருகைதர கிடைத்தமையை பாக்கியமாக கருதுகிறேன்.
சேவைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதிபூண்டுள்ளனர். எனவே, அபிவிருத்திக்குத் தேவையான அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது இந்தப் பிரதேசத்திற்கு மிகவும் முக்கியமானது.
விவசாயிகளின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். அனைத்து விவசாயிகளும் தனியார் துறையை சேர்ந்தவர்கள். உரிமைகளின் அடிப்படையில் அல்லது சிறு விவசாயிகள் என்ற வகையில் அவர்கள் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட பங்களிப்பாளர்களாக உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் கல்விக்கு அதிகூடிய முன்னுரிமையை வழங்குவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியைப் பெறுவதற்கும் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கும், பின்னர் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் துறைகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும்.
எமது நாட்டில் வறுமை நிலை திருப்திகரமாக நிர்வகிக்கபட்டுள்ளது. எந்தவொரு பொருளாதாரத்திலும், எந்த நாட்டிலும் வறுமை ஒரு முக்கிய பிரச்சினை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். செல்வந்த நாடான அமெரிக்காவில் உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. எனவே, உலகின் அனைத்துப் பொருளாதாரங்களும் வறியவர்கள் தொடர்பில் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளன. வடமாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேரந்த குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், சி. விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யதாமினி குணவர்தன, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு