கோட்டே நாக விகாரையின் ஏற்பாட்டில் சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் 82வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் நாக விகாரை இளைஞர் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆக்கபூர்வமான வெசாக் வாழ்த்து அட்டைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024.05.30 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்
சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித நாயக்க தேரரை நாம் அனைவரும் எமது தேசத்தை எழுச்சிபெறச்செய்த மகா சங்கத் தந்தையாக நினைவுகூருகின்றோம். சோபித தேரர் தேசிய இயக்கத்தின் பண்புருவமாக திகழ்ந்தவர். நாட்டின் நலனுக்காகவும், சாசனத்திற்காகவும், நமது மொழிக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் தேரர் அவர்களின் முன்மாதிரியான பயணத்தை நினைவு கூர்கிறோம். எமது நாட்டு மக்கள் மட்டுமன்று சர்வதேச சமூகமும் அவரது சமயப் போதனைகளில் இணைந்தனர்.
அவருடைய சேவைக்கு எல்லையே இல்லை. நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மீண்டும் மீண்டும் நினைவுகூரக்கூடிய வகையில் அவர் மேற்கொண்ட பணிக்காக பங்களிப்பதற்காக நாட்டு மக்கள் அவரை இவ்வாறு கௌரவிக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அவர் பயணம் செய்தார். நம் நாட்டின் மின்சார சக்தி வளத்தில் சூரிய சக்தியை சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார். எத்தனை இளைஞர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். நாட்டின் மிக முக்கியமான சவால்களில் எப்போதும் தலையிட்டார். அவர் நாடு முழுவதும் சென்றது மட்டுமல்ல, அப்போது பயணம் செய்ய கடினமாக இருந்த பகுதிகளிலும் பயணம் செய்தார். எமது நாடு எதிர்நோக்கிய நாட்டை பிளவுபடுத்தும் அச்சுறுத்தலை தைரியமாக எதிர்கொண்டார். நாக விகாரையுடன் இணைந்திருந்த இளைஞர்கள் அந்த பாதையில் தொடர்ந்து பயணித்தனர். அப்போது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தால், இந்த வரலாற்று வரைபடம் நிறைய மாறியிருக்கும்.
தேரவாத பௌத்தத்தை இந்நாட்டின் மையமாக வைத்து எமது அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இன்றும் ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அந்த நாடுகளில் இருந்து வந்து தேரவாத பௌத்தத்தின் மையமாக நம் நாட்டிற்கு ஆராய்ச்சிக்காக வருகிறார்கள். புத்தபெருமானின் தர்மத்தை உலகுக்கு வழங்க அவர் எப்போதும் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதன் மூலம் பௌத்தத்தின் இருப்பு ஆழமாக உலகுக்குக் கொடுக்கப்பட்டதுடன் தேரவாத நாடுகளுக்கிடையேயான நட்புறவு உறுதிப்படுத்தப்பட்டு வலுவடைந்தது. நமது தேசிய மற்றும் மத அடையாளத்தை காக்க தன்னலமின்றி அவர் காட்டிய முன்மாதிரி ஒட்டுமொத்த சங்க தலைமுறைக்கும் சமுதாயத்திற்கும் மிகவும் முக்கியமானது.
அங்கு உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் –
சோபித தேரர் இந்த சமூகத்தை மாற்ற தன்னை அர்ப்பணித்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம். மக்களை எழுச்சிபெறச் செய்த சிங்கம். அவர் நாட்டுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க விரும்பினார். அதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பிரதமர் அன்று நாட்டுக்காக எங்களுடன் இருந்தார். அன்று சர்வதேச தொழிலாளர் தினம் இரத்துச்செய்யப்பட்டது. அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்தன நாம் மே தினத்தை கொண்டாடுவோமா என்று என்னிடம் கேட்டார். சங்கைக்குரிய சோபித தேரர் எங்களுடன் இணைந்தார். சவால்களுக்கு மத்தியில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொரலுகொட சிங்கம் என்ற பெயரை மறக்க வேண்டாம் என பிரதமரிடம் கூறுகிறோம். அதை மறந்து விட இடமளிக்கவும் வேண்டாம்.
சோபித தேரரின் வழியை நாமும் பின்பற்ற வேண்டும். சோபித தேரரின் பாதையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவர் மீதான அக்கறையும் மரியாதையும் ஆகும்.
இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய நாக விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொட்ஹேனே நாரத தேரர் -
மாதுலுவாவே சோபித தேரர் தனது இளமைக்காலம் முதல் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவை அளவிட முடியாதது. இந்த நாட்டில் எந்த ஆபத்து அல்லது பேரழிவு ஏற்பட்டாலும் அதை எப்படி எதிர்கொண்டார் என்பதற்கு இரண்டு வாழும் சாட்சிகள் இங்கு உள்ளன. அவர்களில் ஒருவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், மற்றையவர் நமது நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன.
இப்போதைய போராட்டங்கள் போல் பிரியாணி பார்சல், ஹோட்டல்களில் இருந்து புபே, வங்கிக் கணக்குகளுக்கு இலட்சக்கணக்கான பணம் அன்றைய போராட்டங்களுக்கு வரவில்லை. தினேஷ் குணவர்தன அவர்கள் கொண்டு வந்த ஓரிரு சோற்றுப் பார்சல்களைச் சாப்பிட்டுவிட்டு அன்று வெள்ளைப் பயங்கரவாதப் போராட்டங்களை எதிர்கொண்டதாக சோபித தேரர் எம்மிடம் தெரிவித்தார். அதேபோன்று, முருத்தெட்டுவே தேரர் நான்காவது மாடியில் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டார். நாயக்க தேரரை கைது செய்ய முற்பட்ட போது தினேஸ் குணவர்தனவுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் ஒளிந்து கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்ததைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறானதொரு பணியை செய்ததன் காரணமாகவே அன்று இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பை எம்மால் தடுக்க முடிந்தது. இந்த நாடு எதிர்கொள்ளும் ஆபத்துகள், சவால்கள், தடைகள் என்னவென்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. மாதுலுவாவே சோபித தேரர் யார், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது பிள்ளைகளின் தவறு அல்ல. வரலாறு பற்றிய அறியாமை.
வருங்கால சந்ததியினர் நமது கலாச்சார பாரம்பரியம், நமது நாகரிகம் நமது நாகரீகத்தைப் புரிந்து கொள்ளும் பிள்ளைகளைக் கொண்டு இந்த நாடு முன்னேறுவதைப் பார்க்க விரும்புகிறோம். அதற்குத் தேவையான காரணிகளைத் தொகுக்க வேண்டிய பொறுப்பு மகா சங்கத்தினராகிய நமது பொறுப்பு. அதற்கு விகாரைகள்தான் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்களை அரசியல் அதிகாரம் உருவாக்க வேண்டும். மகா சங்கத்தினருக்கும், சம்புத்த சாசனத்திற்கும், தர்மத்திற்கும் எதிரான பெரும் பாரபட்சங்கள் இன்று இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கு எதிராக தேவையான சட்டங்களை விரைவில் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன். தற்போதைய அரசாங்கத்திற்குள் தேவையான சட்டங்களை கொண்டு வந்து இந்த சம்புத்த சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பை இந்த அரசாங்கம் விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
கிரிவெஹர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக்க தம்மிந்த தேரர், புஷ்பாராம விகாராதிபதி சங்கைக்குரிய எல்கடுவ நாகித தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், நாக விகாரை இளைஞர் அமைப்பின் போசகர் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, கல்விமான்கள், தம்ம பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு