விரைவான பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள். - பிரதமர் தினேஷ் குணவர்தன புதிய இலங்கைத் தூதுவர்களிடம் தெரிவிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை ஈர்ப்பதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் எங்கள் கவனம் உள்ளது. அரசாங்கங்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்கள், முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கையை சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி பிரதானமாக முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக ஊக்குவிக்க வேண்டும். ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் இலங்கை தனது பொருளாதாரத்தை வேகமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதிய வலையமைப்பை உருவாக்குவதற்கு அந்நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புகள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய நண்பர்களுடனும் இணைந்து செயற்படுமாறு புதிய தூதுவர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (பாகிஸ்தான்), எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன (நேபாளம்), க்ஷேனுகா செனவிரத்ன (இந்தியா), அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன (கியூபா), சத்யஜித் ரொட்ரிகோ (இத்தாலி), மதுரிகா வென்னிங்கர் (எகிப்து), தர்மபால வீரக்கொடி (பங்களாதேஷ்), செனரத் திஸாநாயக்க (சிங்கப்பூர்) மற்றும் சந்தன வீரசேன (பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) ஆகிய புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பிரதமரை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, ஊடக ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர, வெளிவிவகார அமைச்சின், மேலதிக செயலாளர் மொஹமட் ஜௌஹர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விஜயந்தி எதிரிசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு