’அனைவரும் ஒரே தேசத்தின் பங்காளிகளாக, வெற்றிமிக்க எதிர்காலத்தின் வாரிசுகளாக செயற்படுவோம். ’ - பிரதமர் தினேஷ் குணவர்தன

பிரதமர் அலுவலகத்தின் ஊழியர்கள் 2023 புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இன்று (2023.01.01) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்..

தேசத்தின் எதிர்காலத்தை வெற்றிகரமானதாக ஆக்குவதற்கான உறுதிமொழியை வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதிபூணும் தருணம் இது. சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகள் என்ற இலக்கை எட்டுவதற்கான அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலமையிலான அரசாங்கம் முழு நாட்டு மக்களுடனும் ஒன்றிணைந்துள்ளது.

இன்று இந்த உறுதிமொழியை வழங்கும் போது, நாட்டின் ஜனாதிபதி அலுவலகம், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், நாடு முழுவதும் பரந்துள்ள அரச சேவை நிறுவனங்கள், எங்களுடன் இணைந்துள்ள இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களினதும் ஒரே எதிர்பார்ப்பு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும். இதன்போது அரச சேவைக்கு மிகவும் முக்கியமான பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் முழு நாட்டிற்கும் அரச சேவையினை செயற்திறனாகவும் ஒழுங்குமுறையாகவும் பயனுறுதிமிக்கதாகவும் கொண்டுசெல்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

வரலாற்றில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பின்னடைவுகளையும் மீள் எழுச்சியையும் அனுபவித்த ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் கீர்த்திமிக்கதொரு நாடாக கட்டியெழுப்ப முடியும். வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டத்திற்கு நாம் முகம்கொடுத்துள்ளோம். வளர்ச்சியடைந்த, உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறவும், பல்வேறு துறைகளில் புதிய அபிவிருத்திகளில் ஈடுபடும் புதிய தலைமுறையை கட்டியெழுப்பவும், எமது கரங்களை நீட்டி, அரச துறையின் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுமாறு பிரதமர் என்ற முறையில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் ஒரே நாடாக, ஒரே தேசத்தின் பங்காளிகளாக ஒரே அபிவிருத்தி செயன்முறையின் வெற்றிமிக்க எதிர்காலத்தின் வாரிசுகளாக எமது பணிகளை மேற்கொள்வோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.