நாட்டின் வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைகளில் முஸ்லிம் சமூகம் வழங்கிவரும் பங்களிப்பு முக்கியமானது. - பிரதமர் தினேஷ் குணவர்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் –

"நாடு சுதந்திரம் பெற்று 75 ஆவது வருடத்தை அடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், எமது சமூகத்தில் ஒன்றிணைந்து வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம், நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கும் வர்த்தகத் துறை, கல்வி மற்றும் பல்வேறு தொழில் துறைகள், விளையாட்டு மற்றும் கலாச்சார துறைகளுக்கும் ஆற்றிவரும் செயற்திறமான பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிதும் பாராட்ட விரும்புகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதனை ஒரு மிக முக்கியமான பங்களிப்பாக கருதுகிறது.

இந்நாட்டில் வாழும் இலங்கை முஸ்லீம் சமூகம் இந்த ரமழான் நோன்பு காலத்தை தமது சமய பக்தியை வெளிப்படுத்துவதோடு, ஏனைய இனத்தவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்துகின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

நாம் ஒரு தேசமாக தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் கடினமான பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, புதிய அரச மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மத்தியில் அந்த இலக்குகளை வெற்றிகொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அனைத்து இனங்களின் ஒற்றுமையையும் செயற்திறமான பங்களிப்பையும் தொடர்ந்தும் பலமாக பேணும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறோம்.

நாம் அனைவரும் அறிந்த வகையில் ரமழான் நோன்பு மாதமானது மிக நீண்ட காலமாகவே இலங்கை முஸ்லிம் சமூகம் அவர்களின் சமயக் கிரியைகளையும் பிரார்த்தனைகளையும் மேற்கொண்டுவருவதோடு, ஏனையவர்களுக்கு உதவுதல் போன்ற செயல்களின் மூலம் எமது நாட்டின் கலாச்சார மற்றும் மத பன்மைத்துவத்துக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்கும் மாதமாகும்.

இன்று நாம் அனைவரும் கொண்டாடும் இந்த இப்தார் விழா, எம்மிடையே நிலவும் நட்புறவையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு நேர்மையான முயற்சியாகும்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமய விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தூதுவர்கள், முஸ்லிம் சமய, பொருளாதார, கலாசார, சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.