மியான்மார் அரசாங்கத்தின் உயரிய கௌரவத்தினைப் பெற்ற மகாசங்கத்தினருக்கு பாராட்டு

மியான்மர் குடியரசின் உயரிய கௌரவத்தினைப் பெற்ற மகா சங்கரத்னரை கௌரவிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (03) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சாகித்ய சக்ரவர்த்தி அக்கமஹா பண்டித சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர், அக்கமஹா பண்டித சியாமோபாலி மகா நிகாயவின் ஸ்ரீ ரோஹண பீடத்தின் தலைமை பதிவாளர் மற்றும் அனுநாயக்க தேரர் கும்புறுபிடிய, சபுகொட இலங்கம்கொட பண்டைய ரஜமகா விகாரை உட்பட ஐம்பெரும் விகாரைகளின் விகாராதிபதி ஓமாரே ஸ்ரீ கஸ்ஸபாபிதான அனு நாயக்க தேரர், கந்துபோட, பொக்குனுவிட, தெமட்டகொட, மற்றும் கந்துரட விகாரைகளின் நாயக்க தேரர் இங்குருவத்தே பியனந்த தேரர், பேராசரியர் முவஎடகம ஞானானந்த தேரர், பேலியகொடை ஸ்ரீ ஜயதிலகராமாதிபதி சங்கைக்குரிய கெடபேரிகந்தே ரத்னசிறி தேரர் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

பௌத்த சாசனத்திற்காக ஆற்றிய தேசிய மற்றும் சமயப் பணிகளுக்காக மியான்மர் அரசு எமது நாயக்க தேரர்களுக்கு உயர்ந்த கௌரவத்தை வழங்கியுள்ளது.

புத்த பெருமானின் போதனைகளை எமது நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பரப்புவதற்கு இது ஒரு சிறப்பான அங்கீகாரத்தையும் ஆழமான செய்தியையும் சேர்க்கிறது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சுமார் எண்பது வருடங்களாக சமயப் பணியில் ஈடுபட்டு வரும் சங்கைக்குரிய கும்புருகமுவ வஜிர தேரரின் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். வித்யாலங்கார பிரிவேனா, வித்யாலங்காரப் பல்கலைக் கழகம், வித்யாலங்கார தர்ம வித்தியாலயம் என வித்தியாலங்காரலிருந்து உருவாகி பல்வேறு திசைகளுக்கு சென்று வழிகாட்டிய சாசனத்தின் மேன்மைக்காக உழைத்த மகாசங்கத்தினருக்கு நீங்கள் பெருமையை சேர்த்துள்ளீர்கள் என்பதில் ஐயமில்லை.

பௌத்த சமயத்தின் முப்பெரும் விழாக்களை நினைவுகூறும் வெசாக் பண்டிகை நாடு முழுவதிலும் பௌத்தர்களால் மட்டுமல்லாது அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. எமது நாயக்க தேரர்கள் எமது நாட்டிற்கும், சம்புத்த சாசனத்திற்கும், எமது நாட்டு மக்களுக்கும் பெற்றுத்தந்த இந்த மாபெரும் கெளரவம் சம்புத்த சாசனத்திற்கு மட்டுமன்றி இந்த வெசாக் பண்டிகைக்கும் விசேட நிகழ்வாக அமைகின்றது.

2600 ஆண்டுகள் கடந்தாலும், புத்தபெருமான் உலகுக்கு வழங்கிய தர்மம் இன்றும்கூட எமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலகம் முழுவதற்கும் ஒரு கொடையாக விளங்குகிறது. மியான்மர் அரசுக்கும் இந்த நாட்டுக்கும் இடையிலான உறவு வெறும் இராஜதந்திர ரீதியில் மட்டுமன்றி சம்புத்த சாசனம் நிலைபெறுவதற்குமாக இருந்தது. அப்போதிருந்து, இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான உறவு சம்புத்த சாசனத்தின் தொடர்பின் மூலம் மேலும் மெருகூட்டப்பட்டு, பலப்படுத்தப்பட்டு அர்த்தமுள்ளதாக விளங்குகிறது.

பிற்காலத்தில் மீண்டும் எமது சங்க சபையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தில் அமரபுர தேசம், இராமாஞ்ய தேசம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. சியாம் தேசத்திற்கு மேலதிகமாக, இந்த இரண்டு பிராந்திய தலைநகரங்களும் மியான்மரில் அமைந்துள்ளன. வித்யாலங்கார பல்கலைக்கழகம், வித்யாலங்கார பிரிவேனா பாலி மொழி கலாசார ரீதியாக உயிர்ப்புடன் பேசப்பட்டுவந்த மத்திய நிலையமாகும். வித்யாலங்கார இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே பாலி மொழியில் சமஸ்கிரத மொழியில் உரையாடக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதில் முன்னிலை வகித்தது.

பாரத தேசத்தில் பிற்காலத்தில் ஜனாதிபதியாக விளங்கிய ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியராக சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்தபோது, வித்யாலங்கார பல்கலைக்கழகத்தின் வேந்தரான எமது நாயக்க தேரர் யக்கடுவே பஞ்சாராம தேரர் அவருடன் சிங்களத்தில் உரையாடவில்லை. ஆங்கிலத்திலும் இல்லை. அவர் சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகிய இரு மொழிகளிலும் உரையாடினார்.

ஜனாதிபதி ராதாகிருஷ்னனும் அதே மொழியிலேயே பதிலளித்தார். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார பிணைப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒரு விசேட சந்தர்ப்பமாகும். சங்கைக்குரிய மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தினது நன்றியை நான் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ரஞ்சித் பண்டார, ஜகத் குமார, மியன்மார் தூதுவர் ஹன் து, புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு