சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணி வந்த பிலிப் குணவர்தனவை கௌரவிக்கும் வகையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்களுக்கு கணினி பயிற்சி நிலையமொன்று வழங்கப்படுகிறது.
- இலங்கையில் உள்ள சீனத் தூதரக ஆலோசகர் சென் சியாங்யுவான் தெரிவிப்பு.
சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் கொஸ்கம பொரலுகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன இலங்கை நட்புறவு தகவல் தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் இன்று (2023.01.12) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன-
இன்று சீதாவக இளைஞர்கள் சீனா என்ற உலகின் மிகப்பெரும் நாட்டிடமிருந்து இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவுக்கு அடித்தளமிட்டதில் மறைந்த பிலிப் குணவர்தன அவர்கள் பெரும் பங்காற்றினார். அதன் பலனாக சீன அரசின் நன்கொடையாக இந்த கணினி நிலையம் இன்று உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு நாடாக நமக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், சீனா உண்மையான நண்பனாக எங்களுடன் இருந்தது.
இத்தகைய பெறுமதிமிக்க வளத்தை எமது இளைஞர் சமூகத்திற்கு வழங்கிய சீன அரசாங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிலிப் குணவர்தனவின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த பெறுமதியான பரிசை உங்களுக்கு வழங்குவதற்கு இலங்கையில் உள்ள சீன தூதரக ஊழியர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
"இன்று, தகவல் தொழில்நுட்ப அறிவு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான கருவியாக மாறியுள்ளது. இந்த தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் கற்ற பின்னர் உங்கள் வாழ்க்கைக்கு நிறைய பெறுமதியைச் சேர்க்க முடியும். தாம் பிறந்த பகுதிக்கும் நாட்டிற்கும் பெருமதியை சேர்க்கமுடியும். இந்த தகவல் தொழிநுட்ப நிலையம் கற்றறிந்த இளம் சமூகத்தை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கிறது.
இந்த மத்திய நிலையம் பாரம்பரிய கணினி நிலையம் என்ற நிலையைத் தாண்டி, பெரும்பாலான நேரங்கள் பிள்ளைகளுக்கு அறிவு புகட்டப்படும் மையமாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோரும் இந்த தகவல் தொழிநுட்ப நிலையத்தை பிரதேச பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சீதாவக்க உறுமய மன்றம் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது. இலங்கை எதிர்கொள்ளும் இக்கட்டான தருணத்தில் சீனா எப்போதும் இலங்கையுடன் நிரந்தர நண்பனாக இருப்பதாக சீனாவின் பதில் தூதுவர் தெரிவித்தார்.
1956ஆம் ஆண்டு இந்நாட்டில் பண்டாரநாயக்கவும் பிலிப் குணவர்தனவும் இணைந்து ஏற்படுத்திய பாரிய சமூகப் புரட்சிக்கு சீன அரசாங்கம் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. அதனால்தான் சீன அரசு 1957 முதல் எமது நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இவையனைத்துடனும் கூறப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், எதிர்கால மக்கள் பிரதிநிதிகளும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகப் பணியாற்றுவது அவசியமாகும். அதைத்தான் இந்த நாடு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. அந்த உண்மையை எப்பொழுதும் எம் உள்ளங்களில் சுமந்து கொண்டு பொது சேவையில் எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்க விரும்புகிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் ஆலோசகர் சென் சியாங்யுவான், சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன உட்பட பெருமளவிலான உள்ளூராட்சி பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.