கொரியாவின் AKOFE சங்கத்தின் இலங்கைக்கான உதவிகள் பாராட்டத்தக்கதாகும் - பிரதமர்

கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு தென்கொரியா வழங்கி வரும் தொடர்ச்சியான உதவிகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். இலங்கையிலிருந்து KOICA புலமைப்பரிசில் பெறுவோர் சங்கத்தினர்கள் (AKOFE) இலங்கைக்கு உதவும் நோக்கில் பல நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பின் புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இலங்கையைச் சேரந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றம் தொழின்மையாளர்கள் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற AKOFE நட்புறவு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், கொரியக் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நட்புறவு மற்றும் இருதரப்பு உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டதுடன், கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அதிக அளவில் உள்ளன, என்றும் குறிப்பிட்டார்.

கொரிய அபிவிருத்தி மாதிரி மற்றும் கொரியாவின் மனித வள திறன் விருத்தி செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்து இலங்கை அதிகாரிகள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவற்றை அவர்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்திவருகின்றனர் என்பதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுகாதார துறை உபகரணங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் மாணவர் தேவைகளை நன்கொடையாக வழங்கி இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவிய AKOFE நிறைவேற்று குழுவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

”எனது தேர்தல் தொகுதியில், தும்மோதரை பஞ்ஞாகுல மகா வித்தியாலயம் மற்றும் புவக்பிட்டிய றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் AKOFE இன் உதவியைப் பெற்ற மிகவும் தேவையுடைய பாடசாலைகளாகும்." என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங், KOICA நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கிம் மியுங் ஜின் மற்றும் AKOFE தலைவர் ரொமேஷ் சேரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.