இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து நியூசிலாந்து சபாநாயகர் பாராட்டு

நியூசிலாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கெர்ரி போன்லீ இன்று (ஜூலை 10) அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

1958 ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமர் வால்டர் நாஷ் மற்றும் அப்போதைய விவசாயம் மற்றும் உணவு அமைச்சர் பிலிப் குணவர்தன ஆகியோர் தேசிய பால் சபையை திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சபாநாயகர் பார்வையிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் குறிப்பிட்ட பிரதமர், நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கொழும்பு திட்டத்தின் கீழ் ஆதரவை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தார்.

1893 இல் நியூசிலாந்தும் 1931 இல் இலங்கையும் உலகளாவிய ரீதியில் மிக ஆரம்ப காலங்களிலேயே வாக்குரிமையை அறிமுகப்படுத்தியும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியும் பெருமைமிக்க பதிவை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

1958 ஆம் ஆண்டு கொழும்பு திட்ட மானியத்தின் கீழ் மஹரகமவில் இலங்கை பல் மருத்துவக் கல்லூரியை நிறுவியமைக்காக நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அதனை மேலும் மேம்படுத்துவதற்கு உதவி கோரினார்.

நியூசிலாந்து சபாநாயகர் இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியை பாராட்டியதுடன், தனது நாட்டின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்தார். சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, மீன்பிடி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கு பரந்த ஆற்றல்கள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பால்பண்ணைத் துறை, பொதுத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் காணிச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நியூசிலாந்து தூதுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கார்லோஸ் சியுங் அண்டி போஸ்டர், குஷ்லா டாங்கரே - மானுவல், லாரன்ஸ் சூ-நான், நிகோ ஹென்னெவெல்ட், நியூசிலாந்து பாராளுமன்றத்தின் ஆலோசகர் மற்றும் உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய மற்றும் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு