கீழ் மல்வத்து ஓயா திட்டத்தை விரைவில் மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்பு…

நிதியை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கீழ் மல்வத்து ஓயா திட்டத்தை விரைவில் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கண்டறியுமாறு நேற்று (2023.05.09 அன்று) பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யான் ஓயா அணைக்கட்டை நிர்மாணித்த Sinomach China CAMC பொறியியல் கூட்டுத்தாபனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவை ஆராய்ந்ததன் பின்னரேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கீழ் மல்வத்து ஓயா திட்ட ஒப்பந்தத்தையும் யான் ஓயா ஒப்பந்தத்தையும் இணைக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் அதிகாரிகளிடம் கூறியதுடன், நீரின் மேல் மிதக்கும் சூரிய சக்தி மின் தகடுகளை அமைத்து பாரிய அளவில் சூரிய மின் உற்பத்தி செய்யும் வாய்ப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகையதொரு திட்டத்தின் மூலம் தேசிய மின்சக்தி திட்டத்திற்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் அதன் மூலம் ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த Sinomach நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி அலெக்ஸ் குவோ, 160 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் இத் திட்டத்திற்காக சீன வங்கிகளில் இருந்து நிதியை திரட்டும் நடவடிக்கையை China CAMC நிறுவனத்தினால் பொறுப்பேற்க முடியும் முடியும் எனத் தெரிவித்தார். முதல் கட்டத்தில் யான் ஓயா நீரத்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி மின் தகடுகளை வைப்பதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தினை தேசிய மின் கட்டமைப்புக்கு விற்பனை செய்ய முடியும்.

கீழ் மல்வத்து ஓய திட்டத்திற்குத் தேவையான கடன் தொகையின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை யான் ஓயா மீது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சூரிய மின்சக்தி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக ஈட்டக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்றும் திரு. எலக்ஸ் குவோ குறிப்பிட்டார்.

கீழ் மல்வத்து ஓய திட்டத்தின் முதலாவது மீளாய்வு மற்றும் சாத்திய வள ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தான் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக இருந்தபோதாகும் என்று இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது வரையில் அது தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களையும் காண முடியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 38,000 ஹெக்டயாருக்கும் அதிகமான நிலப்பகுதிக்கு நீரினை வழங்க முடியும் என்றும், உணவுப் பாதுகாப்புக்கான நிகழ்ச்சித்திட்டத்தை மேம்படுத்துவதற்கு முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் 209 MCM அளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம், 3,590 மீட்டர் நீளம் கொண்ட மண் அணை, ரேடியல் கேடட் வான் வழி, இடது கரை, தெற்கு கரை, புதிய குடியிருப்பு, பிரதேசத்திற்கான கால்வாய் முறைமை மற்றும் மின்சார திட்டமொன்றையும் அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது. மல்வத்து ஓயா மேல் நீர் நிலையில் சுமார் 70% க்கும் மேல் அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன், கீழ் நீர் நிலை வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைந்துள்ளது.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சுமார் 50 ஹெக்டயார் நிலப்பிரதேச அளவில் பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்திக்காக முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் பிரதமர் Sinomach நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். சந்திரசேன, யதாமினி குணவர்த்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் திட்ட மதிப்பீட்டாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்..

பிரதமர் ஊடகப் பிரிவு