இலங்கையர்களாக நல்லிணக்கத்தை வளப்படுத்துவதற்காக சமூகத்தின் உன்னத பாரம்பரியங்களை வலுப்படுத்துமாறு முஸ்லிம் சமூகத்திற்கு பிரதமர் அழைப்பு

இலங்கையர்களாக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், தாய்நாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் உன்னத பாரம்பரியங்களை தொடருமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு (BMICH) மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள முன்னுரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் சிறிது நேரம் வைபவத்தில் கலந்து கொண்டதுடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமது வாழ்த்தினையும் தெரிவித்தார்.

“அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இஸ்லாமிய சமய அறிஞர்கள் பேரவையானது சமூகத்திற்கு மட்டுமன்றி, பன்முகத்தன்மை கொண்ட இலங்கை சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றது" என பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் சமூகம், காலனித்துவத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து ஏழரை தசாப்தங்கள் வரை அதாவது அவர்களின் மத நம்பிக்கை, வாழ்க்கை முறை, கலாச்சாரம். கலைகள் மற்றும் பாரம்பரியங்கள் என்பன இலங்கை சமூகத்தின் கட்டமைப்பில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

"முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பல ஆண்டுகளாக மக்களுக்கும், நாட்டிற்கும் நீடித்த பங்களிப்பைச் செய்து, அனைத்து சமூக மக்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றனர்" என பிரதமர் குணவர்தன ஜம்இய்யதுல் உலமா தலைவர்களின் நூற்றாண்டு வெளியீட்டிற்கான முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதத் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் இந்த ஜம்இய்யதுல் உலமா தலைவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர். முக்கிய குறிப்பு உரையை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வே வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம். அர்கம் நூரமித், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரோப், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.