புத்த பெருமான் காட்டிய மத்தியஸ்தப் பாதை ஐரோப்பியர்கள் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கற்றறிந்த ஐரோப்பியர்களும் புத்தரின் வெளிப்படைத்தன்மை மற்றும் பௌத்த சமயத்தில் சொல்லப்படும் பகுப்பாய்வு நோக்கிலான எண்ணக்கருவை பெரிதும் மதிக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுக்கொள்வது எதையும் நம்ப வேண்டும் என்றல்லாது முதலில் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பது குறித்த புத்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும்.
இன்று (03 ஆகஸ்ட் 2024) அலரி மாளிகையில் நடைபெற்ற ஜேர்மனியின் பெர்லின் பௌத்த விகாரையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் பௌத்தத்தை பிரபல்யப்படுத்த பெர்லின் பௌத்த விகாரையின் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த பிரதமர், “இலங்கையானது கிழக்கு மற்றும் மேற்கின் இயற்கையான மையமாக, பாளி சமஸ்கிருத அறிஞர்களைக் கொண்ட ஒரு சிறந்த தேசமாக இருந்தது. ஆனால் அதன் உண்மையான பெறுமதி இலங்கையின் தேரவாத பௌத்த தர்மமாகும். "இலங்கை அரசின் முதன்மையான கடமையும் பொறுப்பும் பௌத்த சாசனத்தை பேணிக்காப்பதாகும்."
ஜேர்மன் தம்ம போதனை சங்கத்தின் செயலாளர் சேனக வீரரத்ன, பெர்லின் விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த பிரபல பௌத்த அறிஞரான கலாநிதி பால் டால்கே 1919 ஆம் ஆண்டு பெர்லினின் புறநகர்ப் பகுதியான புரோனாவில் 11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ’Das BuddhistischeHaus’ ஆரம்பித்ததையும் 1924 இல் அப்பணிகள் நிறைவடைந்ததையும் நினைவு கூர்ந்தார்.
ஜேர்மனிய தூதர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் கூறுகையில், பெர்லின் விகாரை பல கலாசாரங்கள் மற்றும் பல மதங்களை ஜெர்மன் சமூகம் ஏற்றுக்கொண்டதன் வலிமைக்கு ஒரு சிறந்த சான்றாகும். புத்தர் பெருமான் போதித்த அன்பு மற்றும் காருண்யத்தை வளர்க்கும் கொள்கையில் ஜெர்மன் சமூகம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் “100 Years of Das BuddhisticheHaus in Berlin” என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், தபால் திணைக்களத்தினால் விசேட முத்திரையும் முதல் நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் சங்கைக்குரிய பாணந்துறை சந்தரதன தேரர், சங்கைக்குரிய ஓலந்தே ஆனந்த தேரர் மற்றும் ஜேர்மன் தர்ம போதனை சங்கத்தின் தலைவர் சர்தா அபேரத்ன ஆகியோரும் உரையாற்றினர்.
மகா சங்கத்தினர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, சுரேன் ராகவன், ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, ஏ.எச்.எம். பௌசி, மற்றும் யதாமினி குணவர்தன, வெளிநாட்டு தூதுவர்கள், பௌத்த தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு