உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமாக்கப்பட்ட 8453 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

உலக வங்கியின் அறிவுறுத்தல்களின்படி ஊழியர்களை தூக்கி எறிந்த நாடாக நாம் மாறவில்லை.

அவநம்பிக்கையின் காலம் முடிந்து நம்பிக்கையின் காலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது...

2024.06.29 அன்று இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமாக்கப்பட்ட 8435 ஊழியர்களில் இரத்தினபுரி மாவட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்...

"அரசாங்க சேவைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று திறைசேரி முன்னைய அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு சந்தித்த நெருக்கடி நிலைமையின் போது இந்த பிரச்சினை மேலெழுந்தது. சர்வதேச அளவில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஊழியர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும் என கூறின. அந்த அறிவுறுத்தல்களின்படி ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நாடாக நாம் மாறவில்லை. இதுவே இந்த அரசாங்கத்திற்கும் இவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்ட உலகின் ஏனைய நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம். இத்தகையதொரு சூழ்நிலையில் தான் நீங்கள் இந்த வெற்றியைப் பெறுகிரீர்கள்.

ஸ்பெயின் ஐரோப்பாவில் ஒரு செல்வந்த நாடு. அதிக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதரும் ஐரோப்பிய நாடு. பொருளாதார நெருக்கடியின் போது, முதலில் ஓய்வூதியம் வழங்கவதை நிறுத்தினர். இரண்டாவதாக, நாற்பது சதவீத பொதுச் சேவை ஊழியர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. போர்த்துக்கல் நாடும் அதே நெருக்கடியில் விழுந்தது. பின்னர் கிரீஸ் வீழ்ந்தது. கிரீஸ் அரசு ஊழியர்களை பாதியாக குறைக்கவும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத்தில் பாதியை வழங்குமாறு கூறப்பட்டது. அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றனர்.

இவ்வாறான முன்மொழிவுகள் எமது நாட்டிற்கும் வந்த போதும் அரச திணைக்களங்கள், மாகாண சபை திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்கி எமது சொந்த வேலைத்திட்டத்தை தயாரித்து சேவைகளை பேண முடிந்தது. புதிய வாய்ப்புகளைத் தேடுவதன் மூலமும், உங்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதன் மூலமும் சேவைகளைப் பேணும் எங்கள் திட்டத்தில் இன்று நாங்கள் ஒரு முக்கியமான தருணத்திற்கு வந்துள்ளோம்.

" நீங்கள் உள்ளூராட்சித் துறையில் மிகப்பெரிய வெற்றியைப் அடைந்துள்ளீர்கள். எங்களிடம் செலவு செய்யும் இயலுமை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. அரச வருவாயை முறையாக நிர்வகித்ததால், கடந்த ஆண்டை விட முன்னேற்றம் அடைந்து, இந்த ஆண்டு நிவாரண நிலையை அடைய முடிந்தது. அவநம்பிக்கையின் காலம் முடிவடைந்து நம்பிக்கையின் காலம் நிறுவப்பட்டுள்ளது. உங்களது முழு உரிமைகள் மற்றும் சாதனைகள் மூலம் உங்களது சேவைகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்."

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்புர, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதிநிதிகள், நியமனங்களை பெறுவோர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு