பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு இன்று (15) வத்தளை ஹெந்தலை ரஜமஹா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

சுதேச மருத்துவ அமைச்சினால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சுபவேளையான முற்பகல் 10.17 மணிக்கு ஹெந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி ஹிக்கொட சந்திம நாயக்க தேரரினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைக்கு எண்ணெய் தேய்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த தேசிய நிகழ்வில் பங்கேற்ற மக்களுக்கு மகா சங்கத்தினரால் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் எதிர்பார்த்தபடி மக்களுக்கு நோய்நொடிகளற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்காக சுதேச வைத்தியர்கள் மற்றும் அனைத்து விகாரைகளுக்கும் சிங்கள புத்தாண்டு பஞ்சாங்கங்களை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிகழ்வில் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சுகாதார செயலாளர் பாலித மஹிபால மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு