இலங்கையின் சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் செயற்திறமாக பங்குகொள்ளும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சியான ’சஞ்சாரக உதாவ 2023’ இன்று (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தினால் (SLAITO) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’சஞ்சாரக உதாவ 2023’ கண்காட்சியானது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் அத்துடன் இத்துறையில் பிரவேசிக்க விரும்பும் எவருக்கும் அவர்களின் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய உதவும்.
250 விற்பனைக் கூடங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இன்றும் (19) நாளையும் (20) இடம்பெறவுள்ளது. இது மு.ப 10 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். ஹோட்டல்கள், பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், பயண சேவை வழங்குநர்கள், கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இந்த நிகழ்வில் SLAITO வின் தலைவர் நிஷாத் விஜேதுங்க, ’சஞ்சாரக உதாவ’ கண்காட்சி குழுவின் தலைவர் சரித் டி அல்விஸ் மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு