பொது மக்கள் நலனுக்காக தேவையான முடிவுகளை எடுக்க அரசாங்க அதிகாரிகள் தயங்கக்கூடாது- பிரதமர் தினேஷ் குணவர்தன.

தேசிய உணவுப் பாதுகாப்பு காலி மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (16) காலியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் நலனுக்காக தேவையான முடிவுகளை எடுக்க அரச அதிகாரிகள் தயங்கக்கூடாது.

சமீப காலமாக எம் நாடு முன்னெப்போதுமில்லாத ஒரு வித்தியாசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இங்குள்ள பெற்றோர்களும் பெரியவர்களும் இரண்டாம் உலகப் போரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கால கஷ்டங்களில் இருந்து நாம் தலை நிமிர்ந்தோம். கடந்த காலத்தில் எமது நாடு இன்னும் கடினமான காலகட்டத்திற்கு முகம்கொடுத்திருப்பதால், அதிலிருந்து மீள்வதற்கான மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த உண்மைகளின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்க முக்கியத்துவம் கொடுத்துள்ளார். எங்களுக்கு பொருளாதார முகாமைத்துவ நெருக்கடிகளில் அந்நிய செலாவணி ஒரு தீவிர பிரச்சனையாக மாறியது.

அதேபோன்று கடன்படும் பிரச்சினைகளை தீர்க்கும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். சர்வதேச ரீதியில் எமது நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் காரணமாக, பொது நலன்களையும் ஏற்றுமதியையும் பேணுவதில் நாம் சிக்கலை எதிர்கொண்டுள்ளோம்.

எமது நாடு உணவில் தன்னிறைவு அடைய முடியுமான நாடு. குறிப்பாக அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுகளில் தன்னிறைவு பெறும் திறனைப் பெற்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் பெருமளவு செல்வத்தை நாட்டு மக்களுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்த முடியும். எனவே, பதினான்காயிரத்து இருநூறு கிராமசேவகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களிலிருந்து இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட வேண்டும்.

அரசியல் தலைமைத்துவ பிரதிநிதிகள் ஒன்றுபட்டு
மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமாக மாற்றுவது எமக்கு சவாலாக உள்ளது.

கடந்த காலங்களில் உரப் பிரச்னையால் விவசாயிகள் மத்தியில் பின்னடைவு ஏற்பட்டது. எமக்கு நம்பிக்கை இருப்பதாலும், எங்களை ஆதரிக்கும் நாடுகள் எமது விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாலும், இந்தக் கடன் பிரச்சினையினூடே தலையிடும் திறன் எமக்கு உள்ளது. அந்த நம்பிக்கையை பெறுபேறுகளாக மாற்றும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
பல குறைபாடுகள் உள்ளன. புள்ளிவிவரங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் உள்ளன. ஆனால், இந்த அரச அதிகாரிகள் அனைவருக்கும் அடிப்படைப் புள்ளி விவரங்களைத் தயாரித்துக்கொள்ளும் திறன் உள்ளது. பெண்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் புதிய அணுகுமுறைக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கமநலச் சேவைச் சட்டத்தைப் படித்தால், அந்தச் சட்டத்தின் மூலம் விவசாயம் செய்ய உங்கள் அனைவருக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே யாரும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. கிராமத்தில் முன்வருபவர்களுக்கு விவசாயம் செய்ய காணிகளை வழங்க முடியும் என்று அச்சட்டத்தில் உள்ளது.

சட்டங்களின் அதிகாரங்களை ஒவ்வொரு துறையிலும் செயற்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குகள் என்ன என்பது முக்கிய அரச அதிகாரிகளுக்கு தெரியும். அதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுங்கள். தடை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். கிராமிய மற்றும் பிரதேச மட்டங்களில் உருவாகியுள்ள சிறுதொழில்களுக்கு கைகொடுக்கும் பணியை நாம் ஒன்றிணைந்து தொடர வேண்டும்.

தனித் தனித் திணைக்களங்களாகச் செல்லக் காத்திருந்தால் நமது வளமும் நேரமும் வீணாகலாம். எனவே திட்டத்தை கிராமத்திலிருந்து உருவாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் தீர்மானித்துள்ளனர்.

ஒரு தேசியத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இலக்கின் மூலம் இந்த நாட்டை புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க புதிய வாய்ப்புகளை இளைஞர்கள் கேட்கின்றனர்.

தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான அசோக பிரியந்த, கீதா குமாரசிங்க, மொஹான் பி டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரள, இசுரு தொடங்கொட, யதாமினி குணவர்தன மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹாகோன், காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்