"உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் சூழல் நேய புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு." - பிரதமர் தினேஷ் குணவர்தன

உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் சூழல் நேய புதிய சுற்றாடல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (2023.01.12) நடைபெற்ற வேர்ல்ட் விஷன் கழிவு முகாமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான சூழலுக்கும், மக்களுக்கும் உகந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேவையான கல்வி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய முறைகளின்படி செயற்பட வழிசெய்யப்படும். அதற்கு அரசு சார்பிலும், உள்ளூராட்சி துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் உறுதியளிக்கிறேன்.

ஆனால் இப்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் இதைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல எதிர்காலத்திற்காக இதைச் சொல்ல வேண்டியது அவசியம். இத்தகைய செயல்கள் சிறந்த எதிர்காலத்திற்கு அவசியமானவை, அது ஒருபோதும் மோசமானவை அல்ல.

தூய்மையான நாடு, வருமானம் ஈட்டுவதற்கான வழி என்பதை இந்த திட்டத்தின் முக்கிய கருப்பொருளாக வேர்ல்ட் விஷன் நிறுவனம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் மகிழ்ச்சியான முடிவு உண்டு. சூழலைப் பாதுகாப்பதற்கும், பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் தூய்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும், கழிவுகளை பணமாக மாற்றுவதற்கும் இது ஒரு முக்கியமான முன்னுதாரணமாகும்.

உங்கள் நிறுவனம் அப்போது, எமது நாட்டில் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தது. அந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுப்பதற்கு அந்தத் திட்டத்தை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

மேல் மாகாணத்தில்தான் அதிகளவான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் வீடுகள், வீதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்த பெரிய குப்பை சேகரிக்கும் இயந்திரங்களை இன்றும் கொழும்பு நகரில் பார்க்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிந்தால், கழிவுகளின் அளவை குறைக்கலாம். மீதொட்டமுல்லையில் நடந்த அனர்த்தம் எங்களுக்கு நினைவிருக்கிறது. இப்படி ஒன்று நடக்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மஹரகம தொகுதிக்கு நீங்கள் செல்லும் வழியில் ஹைலெவல் வீதியில் இவ்வாறானதொரு இடம் நீண்டகாலமாக இருந்தது. எமது பிரதேச சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் திட்டமிட்டு இன்று இதனை முழுமையான விளையாட்டு மைதானமாக மாற்றியமைத்துள்ளது. சாவகச்சேரி, வத்தளை போன்ற பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எளிமையாக இது பற்றி பேசினாலும், இந்த பிரச்சனை ஒரு பெரிய அளவிலான பிரச்சனை. இன்று ஒவ்வொரு நகரத்திலும் குப்பை சேகரிப்பு பிரச்சனையாக மாறி வருகிறது.

ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனமும் இணைந்து இந்த குப்பை பிரச்னையை தீர்க்க வேண்டும். இதில் கவனம் செலுத்தி உங்கள் வரவுசெலவுத்திட்டத்தை தயார் செய்யுங்கள். நம்மில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் செல்ல விரும்புகிறோம். சிங்கப்பூரின் தூய்மையும் அதற்கு ஒரு காரணம். அந்த நாட்டில் கழிவுகளை கண்டபடி வீச முடியாது. அப்படியானால் அவர்கள் சிங்கப்பூர் நாட்டவரா அல்லது வெளிநாட்டவரா என்று பார்ப்பதில்லை. அபராதம் விதிக்கப்படும். இந்த வகையான சூழலுக்கு ஏற்ற விதிமுறைகளுக்கு மக்கள் மிக விரைவாக பழகிவிடுகிறார்கள்.

இலங்கையில் இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்திற்கு ஒரு தன்னார்வப் படையணி சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் ஆதரவு என்ற எண்ணக்கரு இங்கே முக்கியமானது.