நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து மீள்வதற்கு உங்களின் அர்ப்பணிப்பும் அரசாங்கத்தின் உறுதியான கொள்கைளுமே உதவின - பிரதமர் தினேஷ் குணவர்தன.

மஹரகம பிரதேச செயலகத்தில் இன்று (18) இடம்பெற்ற தென்னங்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மஹரகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 41 கிராம சேவைக் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய பொருளாதார மறுமலர்ச்சிக் குழுக்களுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி வீட்டுத் தோட்டத் திட்டத்திற்கு உட்பட்ட சமயஸ்தாபனங்கள், முதியோர் இல்லங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்தோட்டத் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு 17 சிறந்த தோட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எம் முன் உள்ள சவாலை வெற்றிகொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தைப் விரிவுபடுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த வருடம் நாம் எதிர்கொண்ட நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீள்வதற்கு உங்களின் அர்ப்பணிப்பும், அரசாங்கத்தின் நிலையான கொள்கையுமே பெரிதும் உதவியது என்றும் பொறுமை என்பது நாட்டு மக்கள் வழங்கிய மிகப்பெரிய அர்ப்பணிப்பு என்றும் தெரிவித்தார்.

கடினமான காலங்களை கடந்து நம்பிக்கைத்தரும் எதிர்காலத்திற்காக இப்போது நடப்படும் ஒரு மரக்கன்று எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பான எதிர்காலத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.