விளையாட்டின் வெற்றிக்காக, பல்வேறு துறைகளில் திட்டங்களை உருவாக்கி, வெற்றி நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதை போன்று தற்போதைய நெருக்கடியான நிலைமையில் நாட்டிற்காக ஒன்றுபட்டு எழுந்திருப்பதற்கும் தலைமைத்துவத்தை வழங்க தயார்...- பிரதமர் தினேஷ் குணவர்தன

விளையாட்டின் வெற்றிக்காக பல்வேறு துறைகளில் திட்டங்களை உருவாக்கி வெற்றி நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதை போன்று, தற்போதைய நெருக்கடியான நிலைமையில் நாட்டிற்காக ஒன்றுபட்டு எழுந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்ட செயலாளர் கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் வர்ண இரவு 2022.12.02 அன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற இளைஞர் அரங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இணைப்புச்செய்யப்பட்டு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல், உத்தியோகத்தர்களின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அவர்களுக்கிடையில் நட்புறவை வளர்த்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டினால் கிடைக்கும் பெறுமானங்களை முன்மாதிரியான வகையில் சமுகமயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த மாவட்ட செயலாளர் கிண்ண விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு தன்மையின் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் வெற்றியைப் பெறுவது போன்று பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் பிரதான பொதுச் சேவை என்ற வகையில் அலுவலகக் கடமைகளில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களுடன் செயற்பட வேண்டும் என பிரதமர் அவர்கள் இங்கு தெரிவித்தார்.

ஒன்றிணைந்து செயற்படுதல், ஒழுக்கத்துடனும் இலக்கு நோக்கியும் செயற்படுதல் போன்று புதிய ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அளவுகோல்களின் அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறீர்களோ அவற்றினால் பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமன்றி நாட்டிற்கும் கிடைக்கின்றது.

குறிப்பாக நாட்டின் மிகவும் அபிவிருத்தியடைந்த மாவட்டம், நாட்டிலேயே அதிக சொத்துக்கள் உள்ள மாவட்டம், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு மாவட்டமாகும்
எமது நாட்டின் புகழை உலகறியச் செய்த கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக்கொண்டிருப்பது ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

இன்று நாடு முகம்கொடுத்திருக்கும் சவாலை நாம் வெற்றிகொள்ள வேண்டும். இந்த பயணத்தின் மிகவும் கடினமான காலகட்டத்தில் அர்ப்பணிப்புடன் உழைப்பதற்காக எம்முடன் கைகோர்த்துள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பொறுமை இல்லாமல் விளையாட்டில் ஈடுபட முடியாது. விளையாட்டின் வெற்றிக்காக பல்வேறு துறைகளில் திட்டங்களை உருவாக்கி வெற்றி நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதை போன்று, தற்போதைய நெருக்கடியான நிலைமையில் நாட்டிற்காக ஒன்றுபட்டு எழுந்திருப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதீப் உடுகொட, யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, அரவிந்த டி சில்வா, சமிந்த வாஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், நிரஞ்சலா சரோஜனி, ரோஹன போகொட உள்ளிட்ட கலைஞர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், விருதுகளை வென்ற விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.