எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பு பலப்படுத்தப்படும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

திர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.

தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையில் நேற்று (2022/12/15) நடைபெற்ற ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில், சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பை வழங்குவதாக ஏற்கனவே உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்பு வலையமைப்பு வசதிகளை குறைக்காமல் பேணுவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலத்தில், பொதுவான அம்சம் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறைந்தமை, தொழில்வாய்ப்புகள் இழக்கப்பட்டமை, முதலீட்டுக்கான திட்டங்களைச் செயற்படுத்த முடியாது போனமை, அதற்கான ஆர்வம் குறைவடைந்தமை, நிர்மாணத் துறையின் அபிவிருத்திப் பணிகள் முடங்கியமை ஆகியன இந்த நிலையைப் பாதித்ததுடன், கடந்த பல மாதங்களாக நாம் சந்தித்த நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சியில், உள்ளூராட்சி நிறுவனங்கள் மட்டுமன்றி முழு நாட்டையும் அரசாங்கம் ஒரு பொதுவான தீர்மானத்திற்கு மாற்றவேண்டி ஏற்பட்டது என பிரதமர் குறிப்பிட்டார்.

அதன்படி, நிதி முதலீடுகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டன. இதன் விளைவாக பல நிறுவனங்கள் வருமான வழிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டன. சில நேரங்களில், அவர்கள் உருவாக்கும் வருமான வழிகள் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எல்லையாக மாற்றப்பட்டது. இது அரசாங்கமாகவும் மற்றும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களாகவும் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களையும் பாதித்தது.

எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலைமையை ஓரளவுக்கு தளர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உள்ள பல தடைகளை நீக்க முடியும் என தாம் நம்புவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபையின் நகரபிதா நாவலகே ஸ்டான்லி டயஸ், எதிர்க்கட்சித் தலைவர் சுனேத்ரா ரணசிங்க, பிரதி நகரபிதா கீர்த்தி உடவத்த உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.