உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் (Global Green Growth Institute ) மற்றும் இலங்கைக்கு இடையே வளர்ந்து வரும் நெருங்கிய கூட்டாண்மைக்கு பான் கீ மூன் பாராட்டு.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) தலைவர் பான் கீ மூன் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் 2024.04.04 அன்று தென் கொரியாவின் சியோலில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டிய பான் கீ மூன், இலங்கைக்கும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்திற்கும் (GGGI) இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு துறைகள் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்குமான முயற்சிகளை உறுதிப்படுத்தினார்.

"மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேண்தகு தன்மையான போக்குவரத்து மற்றும் எமது நகரங்களை பசுமையாக்கும் தலையீடுகள் மூலம் மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் மாறுவதற்கான செயல்பாட்டில் உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரிடம் பிரதமர் கூறினார்.

ஒரு தீவு நாடாக நாம் காலநிலை பாதிப்புகளால் மிகவும் பாதிக்கப்படுகிறோம் என்றும், அந்த பாதிப்புகளில் இருந்து நமது மக்களையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அரசின் இந்த பசுமை வளர்ச்சி முயற்சிகளுக்கு உதவுவதற்கு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் வலுவான கூட்டுறவை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) தலைவர் பான் கீ மூன், சுற்றாடல் அமைச்சு உட்பட இலங்கை அரசாங்கத்துடன் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) நெருங்கிய கூட்டாண்மையும் பசுமையான மற்றும் பேண்தகு எதிர்காலத்திற்கான பொதுவான முயற்சியையும் உண்மையாக பாராட்டுவதாக தெரிவித்தார்.

காலநிலை நிகழ்ச்சி நிரலுக்கான எங்கள் கூட்டு முயற்சிகள் தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற தாங்குதிறனை வலுப்படுத்த உதவும் என்று அதன் ஆலோசகர் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.

தற்போது, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI), தேசிய திட்டத்தை இற்றைப்படுத்தி, இலங்கையின் முக்கிய துறைகளில் விரிவான முதலீட்டுத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தாங்குதிறனைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறது. உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) இலங்கைக்கு புதிய காலநிலை நிதியை அணுகுவதற்கும், குறைந்த கார்பன் மேம்பாட்டிற்காக பேண்தகு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதற்கும், தேயிலை தொழிற்துறையின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் சூரிய சக்தி திட்டங்களை ஆராய்வதற்கும் உதவுகிறது.

இலங்கையின் பசுமை வளர்ச்சி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு எதிர்கால ஒத்துழைப்பு ஒரு நல்ல வழி என்று உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் மேலும் கூறியுள்ளது. இலங்கை அரசாங்கம் தனது பசுமைத் திட்டங்களை உள்கட்டமைப்புத் துறைக்கு விரிவுபடுத்துவதுடன், பசுமைப் பிணையங்களை வழங்குவதற்கான சாத்தியத்தையும் பரிசீலித்து வருகிறது.

இலங்கை 2019 இல் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றது. 2022 ஒக்டோபரில் மாநாட்டின் துணைத் தலைவராகவும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன பேரவையின் துணைத் தலைவராகவும் இலங்கை தெரிவுசெய்யப்பட்டது. உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம் சுற்றாடல் அமைச்சினால் காலநிலை மாற்ற செயலகம் மற்றும் கொள்கை திட்டமிடல் பிரிவினால் உபசரிப்பு வழங்கப்படுகிறது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, அநூப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு