தாய்லாந்துடனான உறவுகளை இலங்கை புதுப்பிக்கிறது

பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

பிரதமர் திணேஷ் குணவர்தனவின் தாய்லாந்துக்கான மூன்று நாள் விஜயத்தின் போது பேங்கொக்கில் உள்ள அரசாங்க இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம் , முதலீடு மற்றும் சமய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காகவும் பிரதமர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையும் தாய்லாந்தும் பௌத்த பாரம்பரியத்தின் காரணமாக வலுவான கலாசார மற்றும் சமய பிணைப்பைக் கொண்டுள்ளன. தாய்லாந்தில் தோன்றிய சியாம் நிகாய, இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் சமய பீடங்களில் ஒன்றாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக தாய்லாந்தின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாக இலங்கை உள்ளது. தாய்லாந்திற்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிகளில் இரத்தின கற்கள், ஆபரணங்கள், தேயிலை, வாசனைத் திரவியங்கள் மற்றும் உலோக பொருட்கள் அடங்கும். இதேவேளை தாய்லாந்து பயன்படுத்திய கார்கள், சீனி, ஆடைகள், கருவாடு, சீமெந்து, இரசாயன பொருட்கள் மற்றும் கார் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறது.

நாடுகளின் வெவ்வேறு ஒப்பீட்டு நன்மைகளைப் பயன்படுத்தி ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்க முடியும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா கருத்துத் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரம் ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பல தாய்லாந்து தொழில்முயற்சியாளர்கள் துறைமுக நகரில் முதலீடு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் இரத்தினக் கற்களை மெருகூட்டி, அவற்றை சந்தைப்படுத்துவதற்கு தாய்லாந்து சிறந்த இடமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த தொழில் பிரிப்பு இரு நாடுகளுக்கும் உலகளாவிய சந்தையில் நேரடி போட்டியைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையும் தாய்லாந்தும் உறுப்பு நாடுகளுக்கிடையே சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகளின் முன்முயற்சி (BIMSTEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளாகும் .

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை புத்துயிர் பெறச்செய்வதற்கும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து தாய்லாந்து பிரதமருக்கு பிரதமர் திணேஷ் குணவர்தன விளக்கினார். ஆசியான் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பைக் கொண்டிருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் டொன் பிரமுத்வினாய், பிரதமர் திணேஷ் குணவர்தனவுடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்ததோடு, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் இலங்கை தூதுவர் சமித கொலொன்னே, பொருளாதார ஆலோசகர் டி. ருசிறிபால மற்றும் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதிர ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு