ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியவிற்கான பணிப்பாளர் நாயகம் திரு.கெனெச் யொகொயாமா அவர்கள் இன்று 2022.09.12 பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, இந்நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புகளை திட்டமிடுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நாட்டின் அபிவிருத்திக்கும், பொருளாதார மற்றும் நிதிச் சவால்களை வெற்றிகொள்வதற்கும் இலங்கை எடுக்கும் பாரிய முயற்சிகளுக்கு திரு. யொகொயாமா தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதிப்படுத்தினார். பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மட்டில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமர் அவருக்கு விபரித்தார். சமூகத்தில் பாரிய தாக்கங்களுக்கு உட்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், கிராமிய விவசாய அபிவிருத்தித் திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இதன்போது பிரதமர் கோரிக்கையொன்றை முன்வைத்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியானது தற்போது வழங்கத் தீர்மானித்துள்ள இருநூறு மில்லியன் டொலர் அவசர கடனுதவி மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வளமான மற்றும் மீள் தன்மை தொடர்பான ஜப்பான் நிதியம் வழங்கும் மூன்று மில்லியன் டொலர் உதவி தொடர்பில் கெனெச் யொகொயாமா அவர்கள் இங்கு எடுத்துக் கூறினார். (Japan Fund for Prosperous and Resilient Asia and the Pacific) அதன் ஊடாக, வறுமை மற்றும் ஆபத்தை எதிர்நோக்குகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுகளை வழங்குவதற்கான வழிகள் உறுதிப்படுத்தப்பட்டன. அத்தோடு வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதாக குறிப்பிட்டார். பூகோள ரீதியாக ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் காரணமாக, கடினமானதொரு சூழ்நிலை இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அது ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் கவலைக்கு ஒரு காரணமாகும். வங்கி ஒத்துழைப்பு வழங்கும் திட்டங்கள் ஊடாக இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு முக்கியமான உதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். இதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டிற்கான பணிப்பாளர் திரு.சென் சென் அவர்கள் குறிப்பிடும்போது இவ்வுதவியானது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட சவால்களுக்கான அவசர உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார். அத்தியாவசிய மருத்துவ வழங்கல்கள், நீர் சுத்திகரிப்பு பொருட்கள், சிறிய மற்றும் நடுத்தரளவிலான முயற்சியாளர்களுக்கான பணி மூலதனம் போன்ற உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு தற்போது காணப்படும் கடன்களின் மிகையைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கான உதவிகளை வழங்குவதகாகவும் அபிவிருத்தி பங்காளர்களுடன் நெருங்கிய வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறினார். நீர் வழங்கல், உள்ளூராட்சி சபைகளது உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கொள்கை மறுசீமைப்பிற்கான ‘புரனேகம’ அரசின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பிரதமர் இதன்போது கேள்வியொன்றைத் தொடுத்தார். அத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடியதன் இயலுமை தொடர்பில் கருத்திற்கொள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் திரு.கெனெச் யொகொயாமா அவர்கள் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில், பிரதமரது செயலாளர், அநுர திசாநாயக்க, அரசாங்க நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பீகே.மாயாதுன்னே, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.