பெருந்தோட்ட மக்கள் அன்று அனுபவித்த வேதனைகளை இன்று வாழும் எவரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. - பிரதமர் தினேஷ் குணவர்தன

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ’நாம் 200’ விழா இன்று (2023.11.02) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார்.

திம்புளை, கொட்டகலை, மவுண்ட் வெர்னன் தோட்டத்தின் கீழ் பிரிவில் இந்திய உதவியுடன் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணமும், ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய கேட்போர் கூடம் மற்றும் கணனி அலகு திறப்பு விழாவும் இதன்போது புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன-

“இந்திய தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள இத்தருணத்தில், அவர்கள் எதிர்கொண்ட சவால்களை உணர்ந்து, அனைத்து தொழிலாளர் குடும்பங்களும் மரியாதையுடனும் நீதியுடனும் நடத்தப்படும் நேர்மையான எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். இலங்கைக்குப் போன்றே இந்திய-இலங்கை நட்புறவுக்காக உறுதியுடன் உழைத்து தியாகங்களைச் செய்த இந்திய வம்சாவளி மக்கள் 200 ஆண்டுகால தனித்துவத்தை உருவாக்கியுள்ளனர்.

இன்று வாழும் எவரும் இந்த மக்களின் வலியையும் வேதனையையும் கண்டிருக்க வாய்ப்பில்லை. அந்த துன்பங்களில் இருந்து மீள்வதற்காக அவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்தார்கள். ஆனால் அந்தப் பயணம் அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலிலும், நாட்டின் வாழ்க்கைச் சூழலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை ஆயிரம் பேர் தங்கள் உரிமைகளுக்காக உயிர் தியாகம் செய்தார்கள்? என்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அறிக்கைகள் ஊடாக வாசித்திருக்கின்றோம். அதனால்தான் அந்தப் பயணம் பலம் பெற்றது. இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களின் போராட்டம் நீண்ட காலமாக தொடர்ந்தது.

இச்சமூகத்திற்கு மாத்திரமன்றி இலங்கையின் உழைக்கும் வர்க்கத்திற்கும் பெரும் சேவையாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். தொண்டமான் அவர்களின் தலைமையில் மக்கள் ஒரு தொழிற்சங்கமாக பெரும் முன்னேற்றம் காண முடிந்தது. பொது விவகாரங்களில் போன்று உரிமைகளை வென்றெடுப்பதற்காக திரு.தொண்டமானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆற்றிவரும் பணிகளை நான் மதிக்கிறேன். அவர் எமது அமைச்சரவையில் உள்ள இளம் அமைச்சர். எனவே, இந்த இருநூறு ஆண்டுகளை நினைவு கூரும் சந்தர்ப்பம் பல பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கும்.

இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் சிறுவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவும் பாடுபடுவது முக்கியமானதாகும். அனைவரும் சிறந்த முறையில் உரிமைகளை பெற்றுவாழும் சூழலை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்த சமூகத்தை முழுமையாக இலங்கை சமூகத்துடன் இணைப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

5000க்கும் மேற்பட்ட மலையக தமிழ் மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கட்சியின் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு