தெற்காசிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு பிரதமர் கோரிக்கை…

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புத்தாக்க உற்பத்திகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துமாறு தெற்காசிய தொழில்முனைவோரிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.

இன்று (2024.08.02) எக்சல் வேர்ல்ட கொழும்பு மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற தெற்காசிய வர்த்தக கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எமக்கு அயலில் உள்ள பிராந்திய சந்தைகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகள் மற்றும் அதன் கண்காணிப்பு உறுப்பு நாடான சீனா உட்பட ஏனைய தெற்காசிய நாடுகளுடன் வலுவான உறவைப் பேணுவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

தெற்காசியா உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளராக இருப்பதால், தேயிலை தொழிற்துறையிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற பிராந்திய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

புத்தாக்க உற்பத்திகள் மூலம் சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் திறனை மேம்படுத்த முடியும் என்றும் இதுபோன்ற பல பொதுவான உற்பத்திகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"வர்த்தக கண்காட்சிகள் மற்றும் வர்த்தக மன்றங்கள் எந்தவொரு தனிப்பட்ட வர்த்தகம் அல்லது அமைப்பின் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய நோக்கத்தைக் கொண்டுள்ளன. இது தெற்காசிய நாடுகளுக்கு இடையே சமூக-பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்கான ஒரு மன்றமாகும்.

தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஏற்றுமதி சந்தைகளில் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான தளத்தை இந்த மன்றம் உருவாக்குகின்றது என்ற வகையில், தெற்காசியாவில் உள்ள வியாபார மற்றும் வர்த்தகங்கள் தங்கள் உற்பத்திகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், சில நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் 2022ஆம் ஆண்டு இலங்கையுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்திவிட்டதாகவும், அந்த நாடுகள் மீண்டும் இலங்கையுடன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜப்பானின் ஆதரவு மற்றும் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்கவும் புதிய தொழில்களை ஆராயவும் ஜப்பான் கடந்த வாரம் இணங்கியமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற சார்க் அமைப்பைச் சேர்ந்த நமது தெற்காசிய அண்டை நாடுகள் மற்றும் சீனாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளிகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று பிரதமர் மேலும் கூறினார்.

2024 தெற்காசிய வர்த்தகக் கண்காட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் பிரதமர் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சார்க் பொதுச் செயலாளர், சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் முகம்மது குலாம் சர்வார், மொஹமட் ஜாசிமுத்தீன், எப்சிசிஐ தலைவர் கீர்த்தி குணவர்தன உட்பட வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள், தெற்காசிய நாடுகளின் உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள், முன்னணி வர்த்தக சபைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு