இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 17 ஆவது பிரதம அமைச்சராக கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் 2024.11.18 ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் 2020 ஆகஸ்ட் மாதம் இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பினால் பெயர் குறிப்பிடப்பட்டார்.
கலாநிதி அமரசூரிய, 1970 மார்ச் 06 ஆம் திகதி இலங்கையின் கொழும்பில் பிறந்த இலங்கையின் ஒரு முக்கிய கல்வியியலாளர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இளைஞர் பிரச்சினைகள், மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியுள்ள அவருடைய பன்முக வாழ்க்கைப் பாதை கல்வி, சமூக செயற்பாடு மற்றும் அரசியல் என வியாபித்துள்ளது.
கடந்த தசாப்தத்தில், கலாநிதி அமரசூரிய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார். அவரது கற்பித்தல் பொறுப்புக்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, அவர் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத் தலைமைப் பாத்திரங்களில் முனைப்புடன் ஈடுபட்டதுடன் 2016 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பாலின சமூக நிலை சமத்துவம் மற்றும் நீதி பற்றிய நிலையியற் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் (2012 மற்றும் 2013) மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் (2014 மற்றும் 2015) மற்றும் செயலாளர் (2016) ஆகப் பணியாற்றிய அவர், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை அதிகரிப்பதற்கான இயக்கத்தில் அவர் பெரிதும் ஈடுபட்டார்.
ஒரு ஆராய்ச்சியாளராக, கலாநிதி அமரசூரிய அவர்கள் பிரபுக்கள் அரசியல், கருத்து வேறுபாடு, சமூக நீதி, இளைஞர்களுக்கு பாகுபாடு காண்பித்தல் மற்றும் சமூகப் புறக்கணிப்பு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறுவர் ஊழியம், நிறுவனம் சார்ந்த குழந்தைப் பராமரிப்பு, சிறு வயதுத் திருமணம், நல்வாழ்வு, கல்வி ஆராய்ச்சி மற்றும் புலமைச் சொத்துரிமை தொடர்பான வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். 2014 இல், கலாநிதி அமரசூரிய இலங்கைக்கான தேசிய மானிட அபிவிருத்தி அறிக்கையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றியதுடன், அந்த ஆண்டில் இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கையை வரைவதிலும் பங்கேற்றார்.
2016 இல், கலாநிதி அமரசூரிய அவர்கள் இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராக சேவையாற்றியதுடன், அது, பாராளுமன்றத்திற்கு அறிக்கைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக முதல் தடவையாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பொறிமுறையாகும்.
கலாநிதி அமரசூரிய தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு பிஷொப் கல்லூரியில் கற்று வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். அவர் டில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மெக்வரி பல்கலைக்கழகத்தில் பிரயோக மானிடவியல் மற்றும் அபிவிருத்திக் கற்கைகள் தொடர்பான முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளதுடன், அதற்காக புலம்பெயர் பெண் தொழிலாளிகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை எழுதினார். 2011 இல், தனது கலாநிதிப் பட்டத்திற்காக அவர் இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரையை எழுதி எடின்பரோ பல்கலைக்கழகம் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் மற்றும் சர்வதேச சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
பொது சுகாதாரம், மனநலம் குன்றியவர்களுக்கான சமூக உபசரணை, அரச மற்றும் தொண்டு நிறுவன அனாதை இல்லங்களில் வாழும் குழந்தைகள், சான்றளிக்கப்பட்ட இல்லங்கள் மற்றும் தடுப்பு நிலையங்கள், குறிப்பாக கம்பஹா, காலி, கொழும்பு, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில், எச்.ஐ.வி. / எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகி வாழுகின்ற நபர்கள், அமரசூரிய அவர்களின் ஆரம்பகால தொழில்சார் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தது.
கலாநிதி அமரசூரிய இலங்கையில் உள்ள பொது சுகாதார நிறுவனமான நெஸ்ட் , இலங்கையில் பெண்கள் மற்றும் பாலின சமூக நிலை தொடர்பான ஆராய்ச்சி நிறுவனமான CENWOR மற்றும் இலங்கையின் சட்டம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சி அமைப்பான Law and Society Trust ஆகிய நிறுவனங்களிலும் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.