சுற்றுலாத்துறை என்பது ஒரு மென்மையான அதிகாரக் கருவியாகுமென டாவோஸில் நடைபெற்ற உலகளாவிய மன்றத்தில் பிரதமர் வலியுறுத்தல்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டங்களுக்கு இணையாக, ஜனவரி 20ஆம் திகதி டாவோஸ்(Davos), பிஸ் புய்னில் (Piz Buin) அமைந்துள்ள Euronews மையத்தில் “Tourism as Soft Power and Diplomatic Capital” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.
சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகள் ஊடாகச் சர்வதேச நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சுற்றுலாத்துறை எவ்வாறு ஒரு மூலோபாய இராஜதந்திரக் கருவியாகச் செயற்படுகிறது என்பது குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. இதில் துருக்கிய அரசுகளின் அமைப்பின் (Organization of Turkic States) பொதுச்செயலாளர் திரு. குபன் ஓமிராலியேவ் (Mr. Kuban Omiraliyev) மற்றும் சவூதி அரேபியாவின் Aseer Investment நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மெஷாரி அல்நாஹர் (Mr. Meshari Alnahar) ஆகியோருடன் பிரதமர் கலந்துகொண்டார்.
இதன்போது, உலகளாவிய போக்குகள் குறித்து உரையாற்றிய பிரதமர்,
மோதல்கள் நிறைந்த உலகில் இலங்கை ஒரு நம்பிக்கை, மீட்சி மற்றும் மீளெழும் திறனுக்கான எடுத்துக்காட்டாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாகக் காலநிலை தீர்வுகள், புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் சீரற்ற பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு மத்தியில் மாறிவரும் உலகச் சூழலில், சுற்றுலாத்துறை எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை இலங்கை நிரூபிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலாத்துறை என்பது வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல, அது வாழ்வாதாரங்களை ஆதரிக்கும், உறவுகளைக் கட்டியெழுப்பும், மக்களை இணைக்கும் ஒரு முக்கியமான இராஜதந்திரப் பாலமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கையின் சமீபத்திய அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ’திட்வா’ சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் சுற்றுலாத்துறை வலுவாக மீட்சியடைந்ததை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மைமிக்க நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடனான மூலோபாய ரீதியான சிறந்த ஈடுபாடு ஆகியன சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைத் தக்கவைக்க உதவியதுடன், சவாலான சூழ்நிலைகளிலும் சாதனை படைக்கும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைய வழிவகுத்ததாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
காலநிலை நேயமான பசுமைச் சுற்றுலாத்துறைக்கு உகந்த உட்கட்டமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், சுற்றுலாத்துறையில் நீண்டகால முதலீடுகளை இலங்கை வரவேற்பதாகவும் தெரிவித்தார். சுற்றுலாத்துறையானது உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு துறையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாகப் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினருக்கு நியாயமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் அத்தியாவசியமானவை எனவும் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





