பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் திரு. காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சேவையாற்றும் திறமையான மற்றும் நிபுணத்துவமிக்க இலங்கையர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூயி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவின் மேலதிக செயலாளர் யசோஜா கே.குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு பங்கேற்றனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

’தொற்றா நோய்களை’ முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அலுவலகத்தினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு முன்கூட்டியே தயாராக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. "ஆரோக்கியமான தேசத்திற்கு ஆரோக்கியமான தொழிற்படை" என்ற கருப்பொருளின் கீழ். தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான சுகாதார நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இன்று (28) அலரி மாளிகை பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுநீரக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரோல் பரிசோதனை, பல் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை என பல மேற்கத்திய மற்றும் சுதேச மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளும் வாய்ப்புகள் இங்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர்களான ஹர்ஷ விஜேவர்தன, மஹிந்த குணரத்ன உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு.

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஹன்னான் சுலைமான், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர், சிறுவர் பாதுகாப்பு,போசாக்கு குறைபாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முன்னைய சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராய்ந்தார்.

யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் திரு.சஞ்சய் விஜேசேகர, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி திரு. கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் பிராந்திய செயற்பாடுகளின் பிரதானி திருமதி யுகோ குசாமிச்சி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திரு. மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மற்றும் மனித உரிமைகளுக்கான பணிப்பாளர் திருமதி திலினி குணசேகர ஆகியோர் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக வங்கியின் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் பிரதமரை சந்தித்தார்.

நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் திரு. டேவிட் சிஸ்லென், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (நவம்பர் 26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

திரு. சிஸ்லென், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின சம்பள இடைவெளியை நீக்குதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் உலக வங்கியில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான முகாமையாளர் திரு. கெவோர்க் சர்க்சியன், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திரு. மஹிந்த குணரத்ன, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியப்பிரிவின் பணிப்பாளர் திருமதி ஹிமாலி போகொடகெதர, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உலக வங்கி பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரஞ்சித் குருசிங்க, வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி புத்திகா விமலசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரிசூரிய அவர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

எகிப்து நாட்டின் தூதுவர், அடெல் இப்ராஹிம்( Adel Ibrahim), ஈரான் தூதுவர், கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஜப்பான் தூதுவர் ISOMATA Akio மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) அதி வண. பேராயர் பிரையன் உடைக்வே (Monsignor Brian Udaigwe) ஆகியோர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்பட தூதரகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

’பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ’பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத இலங்கையை நோக்கி: அனைவருக்கும் பாதுகாப்பான பொது இடைவெளி’ என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்றிருந்தார்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளை(GBV) இல்லாமல் செய்தல் மற்றும் இலங்கைக்குள் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கும் பொது இடங்களை உருவாக்குவதன் தேவை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பல் துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு மற்றும் கொள்கை அமுலாக்கத்தின் ஊடாக GBV தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார். இதற்கென கூட்டு செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் விசேடமாக கருத்து தெரிவித்த பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

’GBV – அற்ற இலங்கை என்ற நோக்கமானது, அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான இடத்துடன் ஆரம்பமாகிறது. குறித்த நிகழ்ச்சித் திட்டம் வெறுமனே அடையாளம் மாத்திரம் அல்ல. மாறாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க அனைத்து பிரஜைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென’ அவர் தெரிவித்தார்.

வன்முறைகளுக்கு எதிரான கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் சுதந்திர சதுக்கத்திலிருந்து கொழும்பு மாநகர சபை வரை விழிப்புணர்வு பேரணியொன்றும் இடம்பெற்றமை நிகழ்வின் முக்கிய அம்சமாகும். இந்த பேரணியின் ஊடாக ஒத்துழைப்பு அடையாளப்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பான பொது இடத்திற்கான உடனடி தேவை தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், தனியார் பிரிவினர் மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் தொடர்பில் அவர்களின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தி GBV க்கு எதிரான குறைந்த சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிப்பதற்கான கூட்டு வாக்குறுதியை வழங்கினர். 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கொழும்பு மாநகர சபை கட்டிடம் செம்மஞ்சல் நிறத்தில் ஒளியேற்றப்பட்டிருந்தது. GBV முடிவுக்கு கொண்டு வருவதற்கான நாட்டின் அர்ப்பணிப்புக்களை உத்வேகத்துடன் நினைவூட்டும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அரச பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு