பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை" ஸ்தாபிக்கப்படும் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பு, ஜூலை 25, 2025 – இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை"யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தெரிவித்தார். இச்சபையானது இலங்கையின் வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் ஏனைய ஆலோசனைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி வங்கியின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் தொழில்முனைவோர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கூடங்கள் மற்றும் இணைய வங்கிச் சேவையான "RDB Quick App" ஆகியவற்றை இணையப் பயனாளிகளுக்காகப் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

40 ஆண்டுகால சேவையைக் கொண்டாடும் வகையில், இலங்கை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்விழாவில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், "கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பிரதேச அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வழங்கி வரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.

தொழில்முனைவோருக்கு இயல்பாகவே திறமைகள் இருப்பினும், அத்திறமைகளை வளர்த்தெடுப்பதற்கு நிதிப் பலம் இல்லாத கிராமிய மக்களை அணுகி, அவர்களுக்குத் தேவையான மூலதனம், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அறிவு ஆகியவற்றை உரிய முறையில் வழங்கி, அவர்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும். ’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் எமது இலக்கை யதார்த்தமாக்கி, கிராம மட்டத்தில் தேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பெரிதும் பங்களித்து வரும் வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கியைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நான் கருதுகின்றேன்," என்றார்.

"நான் இங்கு வந்தபோது, பிரதேச அபிவிருத்தி வங்கியின் அதிகமான வாடிக்கையாளர்களும், பெரும்பாலான வங்கி ஊழியர்களும் பெண்களே என்பதை அறிய முடிந்தது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் நம் நாட்டின் பெண்கள் ஆவர். அவர்களுக்கு உங்கள் நிறுவனம் பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றது," என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அதேபோல், இந்த ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கி, நமது நாட்டின் கிராமிய மக்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதற்கு எமது அரசாங்கத்திற்கு உங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்," எனப் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்தசார், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் டி.எம்.டி.எஸ். குமார மற்றும் வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

துருக்கி நாட்டின் தேசியக் கல்வி அமைச்சர் இலங்கைப் பிரதமரை சந்தித்தார்

துருக்கி குடியரசின் தேசியக் கல்வி அமைச்சர் கௌரவ யூசுஃப் தெகின் அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

அமைச்சரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே நிலவிவரும் நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு, குறிப்பாக பொருளாதாரம், உலக வர்த்தகம் மற்றும் கல்வித் துறைகளில் இருந்து வரும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார். அத்தோடு சந்திப்பின்போது, பிரதமர் துருக்கி முன்வைத்த புதிய கல்வித் திட்டத்தினைப் பற்றி எடுத்துரைத்தார்.

அத்தோடு இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்த கருத்துப் பரிமாறல்கள், கல்வி, உலக வர்த்தகம், தளவாடம், ஆற்றல், சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது துருக்கியின் தேசியக் கல்வி அமைச்சருக்கு, பிரதமருடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்ததற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை, குறிப்பாக கல்வித் துறைக்கான பங்களிப்பை பற்றி மீண்டும் வலியுறுத்திய துருக்கியின் தேசியக் கல்வி அமைச்சர், அமைதி மற்றும் மனித நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காக கல்வித் துறையில் ஒத்துழைப்பின் தேவையையும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

துருக்கி பிரதிநிதிகள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி, துருக்கி குடியரசின் தூதுவர் கௌரவ செமிஹ் லுத்ஃபு துர்குத், தேசியக் கல்வி அமைச்சின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் நாயகம் நல் எர்யில்மாஸ் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் செயலர் நாலக கலுவெவ, பிரதமரின் மேலதிக செயலர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர்.

பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்:

* கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்:

"ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார்.

* க.பொ.த சாதாரண தரப் பரீட்சை:

புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும்.

* அமுலாக்கத்தின் தொடக்க நிலை:

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

* வகுப்பறை மாணவர் எண்ணிக்கை:

ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

* ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை:

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

* முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்:

முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் ஊடகப் பிரிவு

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில், கடந்த 22ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற, eMHIC சர்வதேச டிஜிட்டல் மனநலம் குறித்த கலந்துரையாடலின் போது இதை அவர் தெரிவித்தார்.

இலங்கையில் டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களைத் தீர்க்க புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகளை ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் ஆகும்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்:

பரந்த அளவில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஓர் அங்கமாக, தற்போதைய மனநல சேவையை டிஜிட்டல் தளத்திற்கு மாற்ற தேவையான தீர்வுகள் குறித்து அரசின் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் செயல் திறன், பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறிகள் தொடர்பான விடயங்களை உறுதி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நன்கு பயிற்சிபெற்ற மனநல ஊழியர்களின் படையும், சமூக மட்டத்திலான ஒருங்கிணைந்த பல்துறை மற்றும் பல்வகைச் செயற்திட்டங்களும் இதற்கு மிக முக்கியமானவை. புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கலில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே தேவையான டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் பிள்ளைகளின் மனநலம் குறித்த போதுமான புரிதல் இல்லாமை போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இவ்வாறான விடயங்களை எடுத்துரைக்கும் விதமாக எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் குறிப்பிடினார்.

இந்த நிகழ்வில் கனடா செனட் உறுப்பினர் திருமதி Kathy Hay, eMHIC சர்வதேச ஒத்துழைப்பு நிர்வாக இயக்குனர் பேராசிரியர் Anil Thapliyal உள்ளிட்ட eMHIC பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், அறிவியலாளர்கள், தொழில்முறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச விருதைப் பெற்ற கலாநிதி நதீஷா சந்திரசேன பிரதமரைச் சந்தித்தார்

அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, ஜூலை 21 அன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளால் அடைபடும் வடிகால்களில் ஏற்படும் தடைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, கலாநிதி நதீஷாவினால் உருவாக்கப்பட்ட ’ஸ்மார்ட் வடிகால் அமைப்புக்கான’ (Smart Drainage System) எண்ணக்கருவிற்கே சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற WIPO விருது விழாவில் 95 நாடுகளைச் சேர்ந்த 780 நிறுவனங்களையும் தாண்டி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சந்திப்பின்போது பிரதமர், கலாநிதி நதீஷா சந்திரசேனவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹர நிறைவடைந்தது

புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர நேற்று (19) நிறைவடைந்தது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின் வீதி வலா ஆரம்பமானது.புனிதச் சின்னம் அடங்கிய பேழையை ’வாசனா’ யானையின் மீது வைத்ததன் பின்னர், மொனராகலை மாவட்ட செயலாளர் திரு. பசன் ரத்நாயக்க, யுதகனாவ எசல மகா பெரஹரா இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றதற்கான சாசனத்தை ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,ஹரினி அமரசூரிய,

யுதகனாவ ராஜ மகா விகாரையானது, தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலமாகும். ஊவா வெல்லஸ்ஸயின் பண்டைய பெருமையையும் கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாக்க இந்த வருடாந்த பெரஹர விழா மிகவும் முக்கியமானதாக அமைவதோடு உலக வாழ் மக்கள் மத்தியில்இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகின்றது.

ராஜாவலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து மூல வரலாற்றின் படி,"மஹாநாக, காவந்திஸ்ஸ, துட்டகைமுனு, சத்தாதிஸ்ஸ, மகா பராக்கிரமபாகு , மகா விஜயபாகு, நிஸ்ஸங்கமல்ல, ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க போன்ற மன்னர்கள் இப்புனிதத் தலத்தின் வளர்ச்சிக்காக தமது பங்களிப்பினை பெற்று கொடுத்திருக்கின்றனர்.

"பண்டைய காலத்தில் நாட்டை ஒன்றிணைக்கும் கடினமான பணியில் யுதகனாவ புனிதத் தலம் பெற்றுக் கொடுத்திருக்கும் பாரிய பலமும்,ஆசீர்வாதமும் சிறப்பு மிக்கதாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க மகா தாதுகோபுரமானது அதனை உலகிற்கு பறைசாற்றி நிற்கின்றது. இதனாலேயே யுதகனாவ வருடாந்த எசல பெரஹரா பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றது.

"இறுதியாக, வரலாற்று சிறப்புமிக்க யுத்தாகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல பெரஹராவை உடரட்ட,பஹத்தரட்ட, சப்ரகமுவ, நடனங்கள் மற்றும் யானைகள் அடங்கிய கலாச்சார அம்சங்களுடன் நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊவா வெல்லஸ்ஸ இரு பிரதேசங்களினதும் பிரதான சங்க நாயக்கரும், யுதகனாவ ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமாகிய கல்டெம்வத்தே நந்தரதன நாயக்க தேரர் அவர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

அஸ்கிரி விகாரை பிரிவின் ரத்னபுர மாவட்ட சங்க நாயக்கரான அதி வணக்கத்துக்குரிய வத்துரக்கும்புரே தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்க சங்கத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு