பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

எமது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணி செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எனக்கு அதை 100% நம்பிக்கையுடன் குறிப்பிட முடியும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எமது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணி செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எனக்கு அதை 100% நம்பிக்கையுடன் குறிப்பிட முடியும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொலன்னாவை புல்மன் கிராண்ட் மண்டபத்தில் ஏப்ரல் 16 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முதலில், உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நாம் அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்க வேண்டும். அதற்கும் உங்கள் அனைவருக்கும் சக்தியும் தைரியமும் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் நியமித்த அரசாங்கத்தையும், நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்தையும் பற்றி சுருக்கமான மீளாய்வொன்றினை செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது நல்லது என்று நினைத்தேன். 6 மாதங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு காலம். ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்றிணைந்தோம்.

நாட்டைப் பொறுப்பேற்றபோது நாடு எங்கிருந்தது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நாட்டின் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அந்தப் பழைய அரசியல் கலாசாரத்திற்குள் இந்த நாடு முன்னேற எந்த வழியும் இல்லை என்ற முடிவோடுதான் நீங்கள் எங்களை நியமித்தீர்கள். அந்த விடயங்களில், நாட்டில் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. நாம் எல்லாவற்றையும் கட்டியெழுப்ப வேண்டும், சரிசெய்ய வேண்டும், கட்டமைக்க வேண்டும், சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த ஆயிரம் விடயங்களில், நாம் முன்னுரிமை அளிக்க வேண்டிய பல பகுதிகளும் பிரச்சினைகளும் உள்ளன.

முதலில் செய்ய வேண்டிய சில விடயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு நாம் எதுவும் செய்ய முடியாது. முக்கிய விடயம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகும். அதற்கு முக்கிய காரணம், உங்களுக்குத் தெரியும், எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள், இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால், பொருளாதாரம் சரிந்துவிடும் என்ற பெரும் அச்சத்தை மக்களிடையே உருவாக்கியிருந்தனர். அதுதான் நமது எதிரிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய முழக்கமாக இருந்தது. அவர்கள் ஒரு அழிவுகரமான குழு, நாட்டை பினோக்கிக் கொண்டு செல்லும் ஒரு குழு என்பதை உறுதிப்படுத்தவே இந்த கருத்து உருவாக்கப்பட்டது. இந்த நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்படாததால் தான் அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனால் வர்த்தகர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மத்தியில் அந்தக் கண்ணோட்டம் குறித்து சிறிது பயம் இருந்தது. அப்படியானால், அந்த பயம் மற்றும் சந்தேகத்தின் மத்தியில் நாடு நிலையற்றதாக மாறியிருக்கலாம். அந்த உறுதியற்ற தன்மையை நீக்கி, நாட்டிற்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது.

இந்த ஆண்டு இலங்கைக்கு மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு. முதலீட்டாளர்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளனர். பல்வேறு திட்டங்கள் இப்போது நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. அண்மையில் நான் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த போது, இங்குள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், முதலீட்டாளர்களாக வரவும் எங்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் வர்த்தகங்களைத் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த ஆர்வத்திற்கு முக்கிய காரணம், இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்தான்.

உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் எல்லா பக்கங்களிலும் சற்று கொந்தளிப்பான காலகட்டத்தைக் கடந்து செல்வதைக் காணலாம். அரசியல் குழப்பமான காலம். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட, எமது நாட்டின் மீது சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக, நாம் சில ஆறுதல் தரும் நம்பிக்கையைக் காணலாம். இது மிகவும் முக்கியமானது. இது நாம் அனைவரும் சேர்ந்து அடைந்த வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

இந்த வரவிருக்கும் தேர்தல் ஏன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றால், மேல் மட்டத்தில் தலைமைத்துவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தோழர் அனுர குமார அந்த முன்மாதிரியை எமக்கு மிகச் சிறப்பாக வழங்கியுள்ளார், அதை அவர் செயற்படுத்தி வருகிறார். அந்த பலத்தால்தான் எங்கள் முதல் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவேற்ற முடிந்தது. அந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கிராமிய அபிவிருத்தியை விரைவுபடுத்துவதே எங்கள் முன்னுரிமை. அதனால்தான் மாவட்டங்கள் பிரதேச சபைகள் மாகாணங்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டங்களை செயற்படுத்த 2 வழிகள் உள்ளன. அந்தப் பணத்தைச் செலவழிக்க இரண்டு வழிகள் உள்ளன: சில திருடர்களை நியமித்து விரைவாகச் செலவிடலாம். எவரேனும் சிலரின் பைகளில் அது சென்று சேரும். ஆனால் பல வருடங்களாக செய்யப்படாத விடயங்களைச் செய்யவே நாங்கள் இவ்வளவு பணத்தை ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

எனவே, நீங்கள் மேலே சுத்தம் செய்தது போல், கீழ் மட்டத்தில் உங்கள் கிராமத்தில் நீங்கள் தலைமைத்துவத்தை நிலைநாட்டவில்லை என்றால், கிராமத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்திற்கு யார் பொறுப்பு? நாம் மேலே ஒதுக்கியுள்ளோம். ஜனாதிபதி அவர்களின் திட்டங்களின்படி, ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பணத்தை, ஒரு மாதம் பாராளுமன்றத்தில் விவாதித்து, அந்த மாதத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் சேர்த்து அங்கீகரிக்கப்பட்ட பணத்தை இப்போது நாம் உரிய முறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிட வேண்டும்.

மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவை செலவு செய்ய வேண்டுமேயன்றி, அதை வேறொருவரின் சட்டைப் பைக்கு செல்ல இடமளிக்க கூடாது. அதனால், இதற்காகத் தான் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவழித்து, அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தும் அதிகாரம் இங்கு தான் உள்ளது. எனவே, இதைச் சரியாகச் செய்வதன் மூலம் மட்டுமே, அந்த எட்டு மாதங்களில் நாம் ஏதாவது நல்லது செய்துள்ளோம் என்பதை கிராமத்திற்குக் காட்ட முடியும். மேலே நாம் செய்வதைத் தொடர்கிறோம். இப்போது அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அவற்றின் நன்மைகள் கீழ் மட்டங்களுக்கு கிடைக்க நாம் பிரதேச சபைகளை முறையாக நிறுவ வேண்டும்.

கொலன்னாவை தொகுதியில் பிரதேச சபை மற்றும் நகரசபைக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில், நான் உண்மையிலேயே இதைச் சொல்ல முடியும்: தேசிய மக்கள் சக்தி கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் திருட முடியாது.நாம் திருடுகிறோமா இல்லையா என்பது எமது தனிப்பட்ட நன்மை தீமைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. எங்கள் கட்சிக்குள் உள்ள ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் அவை நிர்வகிக்கப்படுகிறது.இந்த நாட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து நாம் யாரும் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. குறைபாடுகள் உள்ள சாதாரண மக்கள். சரியான செயன்முறை பின்பற்றப்படாவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் உள்ளன. அதனால்தான் கொலன்னாவையில் உள்ள இந்த மக்களுக்கு ஒதுக்கிய பணத்தை அபிவிருத்தி நோக்கங்களுக்காக மட்டுமே முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழு இருக்குமென்றால், அது தேசிய மக்கள் சக்திதான் என்று நான் பொறுப்புடன் கூற முடியும். வேறு எந்த அரசியல் கட்சியும் அந்த உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. இது அரம்பம் மட்டும் தான். பொருளாதார ரீதியாக நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. அது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இது இன்னும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எமது உற்பத்திப் பொருளாதாரம் இப்போதுதான் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பாதாள உலகத்தையும் போதைப்பொருட்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டம் எங்களிடம் உள்ளது. கொலன்னாவையைப் பற்றி பேசும் போது நினைவுக்கு வரும் சில விடயங்கள் உள்ளன. இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். நாங்கள் அதைத் தொடங்கிவிட்டோம். அதனால்தான் இந்த அளவு அலறல்கள் அதிகரித்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இவ்வளவு காலமாக, பாதாள உலகமும், போதைப்பொருள் கடத்தலும் அரசியல் பாதுகாப்புடன் செயற்பட்டு வருகின்றன. இன்று, அந்த அரசியல் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அரசியல் வழிமுறைகளால் பாதுகாக்கப்படாத இந்த விடயங்களை நாம் கூர்ந்து கவனித்தால், இவை எத்தனை நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ளன, அவற்றைத் தடுக்க முடியாத அளவுக்கு அவை எவ்வளவு ஊடுருவியுள்ளன என்பதைக் காணலாம். எனவே இப்போது நாங்கள் அதைப் பாதுகாப்பதில்லை. பொலிஸுக்குள் இதைப் பாதுகாப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, பொலிசாரினாலேயே நிறுத்தப்படுகின்றது. எனவே இது ஒரு பெரிய வேலை. ஒரு பெரிய சவால். ஆனால் நாங்கள் அதை பயமின்றி முன்னெடுத்திருக்கின்றோம். இந்த போதைப்பொருட்களால் எம் நாட்டின் இளைஞர்கள் இப்படி சீரழிவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான பல பிரச்சினைகள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் ஒன்று, தெற்கில் வேறொன்று. விவசாயம் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளும் உள்ளன. கொலன்னாவை வெள்ளப் பிரச்சினையும் அப்படியான ஒன்றாகும். இப்போது வெள்ளம் எம் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால் நாம் எப்போதும் அப்படி வாழ முடியாது. இதற்கு ஒரு நிலையான தீர்வு தேவை. நிலையான தீர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான வகையிலான ஒரு தீர்வு அல்ல. விஞ்ஞானபூர்வமான தரவுகளின்படி, நிபுணர்கள் உள்ளனர், அவர்கள் மூலம், இதை எப்படி செய்வது, இங்கே என்ன செய்ய வேண்டும், இங்கே எங்கே தவறு உள்ளது, தற்போதைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று அனைத்தையும் ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்து சரியான முடிவை எடுக்கும் செயன்முறையை இப்போது நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம். எனக்கு ஒரு நாளைக்கு சுமார் 1,000 கடிதங்கள் வருகின்றன. அந்த ஆயிரம் கடிதங்களில், 900 கடிதங்கள் கிராமத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள். ஆனால் அது தீர்க்கப்படாததால் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள். இப்போது நான் அதில் நேரத்தைச் செலவிடும்போது, நான் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாது. நான் அதைப் பார்க்கவில்லை என்றால், தீர்க்கப்படாத தொல்லாயிரம் பிரச்சினைகள் உள்ளன என்று அர்த்தம். எமது உள்ளூராட்சி மன்றங்களையும் நகராட்சி மன்றங்களையும் முறையாக நிறுவியிருந்தால் அந்தப் பகுதியைக் எம்மால் காப்பாற்ற முடியும். எனவே, அந்த காரணத்திற்காகவும், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதே தொலைநோக்குப் பார்வையுடன் மேலிருந்து கீழாகச் செல்லக்கூடிய ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.

எனவே, இந்த எல்லா காரணங்களுக்காகவும், மே 6 ஆம் திகதி நடைபெறும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இது ஒரு பெரிய மாற்றம். நீங்கள் எங்களிடமிருந்து எதிர்பார்த்த இந்த மாற்றம் எவ்வளவு சிக்கலானது என்பது இப்போது எமக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாம் எவ்வளவு செய்ய வேண்டும், எவ்வளவு மாற வேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்கு உணர்த்துகிறீர்கள். நாங்கள் இந்தப் பயணத்தில் வெற்றிபெருவோம்.

இந்த மக்கள் சந்திப்பில் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் குழுத்தலைவர் தனுஷ்க பிரியதர்ஷன, கொலன்னாவ நகர சபை குழுத்தலைவர் தம்மிக்க விஜேமுனி உள்ளிட்டவர்கள், தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தன ரணதுங்க உட்பட கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புத்தாண்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நிகழ்வுக்கு வருகைதந்திருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர்,

"சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எமது நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது எமது குடும்பத்தை மையமாகக் கொண்டு, எமது பாரம்பரியங்கள் மற்றும் உறவினர்களை நினைவில் கொண்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை."

இந்தப் பண்டிகையின் மூலம்தான் எமது ஒற்றுமை, அன்பு, பிணைப்பு அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த நாட்டிற்கு தேவையானவையாகும். ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல. உண்மையான அபிவிருத்திக்கு எமது ஆன்மீகம், உறவுகள் மற்றும் பிணைப்புகள் அனைத்தும் முக்கியமானவை. இத்தகைய பண்டிகைகளின் போது அவற்றை எமக்கு நினைவூட்டவும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்கவும் இந்த பாரம்பரியங்களை நாம் பின்பற்றுகிறோம் .

எனவே இது மிகவும் முக்கியமான நாள். இந்த வாரம் முழுவதும் நாங்கள் ஒன்றாக பல்வேறு விடயங்களைச் செய்தோம். அடுத்து, நாம் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்க வேண்டும்.

"பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும், அனைத்து பிணைப்புகளையும் வலுப்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான, மிகவும் வளமான மற்றும் அமைதியான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா, நகரசபை செயலாளர் நெலும் குமாரி கமகே மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் நெதிமாலை விஷ்ணு கோயிலுக்கு ....

தெஹிவளை கல்கிசை மாநகர சபை வேட்பாளர் குழுவின் தலைவரும், முன்னாள் மேலதிக அளவையாளர் நாயகம், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான திரு.பெரகும் சாந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவின் அழைப்பின் பேரில், சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெதிமாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர விஷ்ணு கோயிலில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்குபற்றி புத்தாண்டுக்காக இந்து சம்பிரதாயங்களின்படி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்கான தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் குழுவின் உறுப்பினர்களான லலித் சிறினிமல், அசேல பொன்சேகா, அகலங்க சேரசிங்க, தமித் ஜெயவர்தன, ஜயந்த குணரத்ன, லக்ஷ்மன் கம்லத், சரத் தம்மிக்க, தினேஷ் சோமதிலக, குலசிங்கராசா ரமணன், ரமணி அலகொலங்க, ரஸ்மினா ஹசன், குமாரி கருணாஜீவ, யாலினி ராஜரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா ஏப்ரல் 14 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது காலை 06.44 மணிக்கு இடம்பெறும் வேலை, கொடுக்கல்வாங்கல் மற்றும் உணவு உட்கொள்ளும் சுபவேளையில் ஒரு மா மரத்தை நட்டு பிரதமர் புத்தாண்டு பணிகளை ஆரம்பித்தார்.

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சடங்குகள், கிராமிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவை இங்கு இடம்பெற்றன.

இந்த நிகழ்வை புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார விவகாரத் திணைக்களம் மற்றும் கடுவலை பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வில் புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அசித நிரோஷன மற்றும் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்ட பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

"வளமான நாடு, அழகான வாழ்க்கை"க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.

ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது. எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும், நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு, இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.

அண்மைய வரலாற்றில், நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம். இருப்பினும், ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழி வகுத்துள்ளன.

அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைற்கல்லைக் குறித்து நிற்கிறது. இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும். எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத்தருணத்தில், அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

மலரும் இந்த சிங்கள தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்திற்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்..!

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 ஏப்ரல் 14 ஆம் திகதி

நெருக்கடிகளை இனவாத மனநிலையுடன் பார்க்காத அரசாங்கத்தை கட்டியெழுப்பியுள்ளோம். - கலாநிதி ஹரிணி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) விரைவில் இரத்துச் செய்யப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்:

மன்னார் முசலி தேர்தல் தொகுதியில் சிலாவத்துறை பகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பில் அமைச்சரவை ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக இடமளிக்கப்படமாட்டாது என்றும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவாத மனப்பான்மையுடன் பார்க்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு