ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்வாங்கும் வகையில், ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கு ஜனாதிபதி நிதியம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய, சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிப்பதற்கான, மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு செப்டம்பர் 14ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இதன்போது சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையின் கீழும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பானது நாட்டின் எதிர்கால மாற்றத்திற்குத் தேவையான பங்களிப்பையும் தலைமைத்துவத்தையும் பெற்றுத்தரக் காரணமாக அமையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
"ஜனாதிபதி நிதியம் பற்றிப் பேசும்போது அதைத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றியே அதிகம் கேள்விப்படுகிறோம். வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களது சலுகைகள் மற்றும் நலன்களை அதிகரித்துக்கொள்ளவே இந்த நிதியம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.
ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறி, ஜனாதிபதி நிதியத்தின் உண்மையான நோக்கத்திற்காக அதை 100% பயன்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதியம் இப்போது மக்களுக்கு நெருக்கமாகி, மக்கள் தங்கள் பிரதேசத்திலேயே அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோல், மனித வளத்தை மேம்படுத்துவதை அரசாங்கம் தனது முதன்மைப் பணியாக அடையாளம் கண்டுள்ளது. அந்த நோக்கத்துடனேயே நாம் கல்வியில் முதலீடு செய்கிறோம். அந்த முதலீடானது பண ரீதியில் மட்டுமன்றி ஏனைய அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாறிவரும் உலகில் வித்தியாசமான விதத்தில் சிந்திக்கக்கூடிய, ஒரு விடயத்தின் அனைத்துப் பக்கங்களையும் பார்க்கக்கூடிய, உலகத்தை மாற்றக்கூடிய மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கே நாம் முயற்சிக்கிறோம்."
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அவர்கள்,
"ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் நிதியம், அதேபோன்று அது மக்களின் தனி உரிமையாகும். அதனை முறையாக மக்களிடம் ஒப்படைப்பதே நமது பொறுப்பு.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஜனநாயக ரீதியிலான மாற்றத்தின் கீழ், மனித வளத்தை அபிவிருத்தி செய்தல் மிகவும் அவசியமானதாகும். இலங்கை அதிக எண்ணிக்கையிலான இளம் வயதினரைக் கொண்ட ஒரு நாடாகும். ஆகையினாலே, அந்த மாற்றத்தை அடைய இந்த அரசாங்கம் உங்களுக்காக அந்த கல்விச் சூழலை உருவாக்கி வருகிறது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, "கோப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள், தகுதிகளுக்கு அப்பால், சமூக உணர்வுள்ள, சமூகப் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கக்கூடிய, நாடும் சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்ற மாணவர் சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவலக பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை அதிகாரிகள், நிர்வாகத் துறை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு