தொழில்நுட்பப் பயன்பாட்டின் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கல்விச் சீர்திருத்த உரையாடலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்!
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
6ஆம் தர ஆங்கில மொடியூலில் (Module) ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகா நாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தும் போதே, இன்று (08) கண்டியில் வைத்து பிரதமர் இதனைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மொடியூல்களினதும் அச்சுப் பிரதிகள் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.
இன்று காலை கண்டி மல்வத்து விகாரைக்குச் சென்ற பிரதமர், மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து, 6ஆம் தர ஆங்கில மொடியூலின் முதலாம் பதிப்பில் ஏற்பட்டுள்ள பிழை குறித்து விளக்கமளித்தார்.
அதன்போது, கல்வி என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம் எனவும், இவ்வாறான விடயங்களில் அதிக கரிசனையுடனும் சரியான மேற்பார்வையுடனும் செயற்பட வேண்டும் என்றும், முறையான விசாரணையை நடத்தி கல்விச் சீர்திருத்தப் பணிகளை முறையாக முன்னெடுத்துச் செல்லுமாறு மகா நாயக்க தேரர் ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற பிரதமர், அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து, ஆங்கில மொடியூலில் உள்ள சிக்கல் குறித்து விளக்கமளித்தார்.
கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் தேவை என்றும், அது பற்றி முறையான மேற்பார்வையுடனும் மிகுந்த கவனத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த மகா நாயக்க தேரர், இலங்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் விதத்திலிருந்து அது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.
மகா நாயக்க தேரர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இந்தச் சிக்கல் குறித்து ஆராய நாம் ஒரு குழுவை நியமித்தோம். பின்னர் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரையுடன் அந்தப் பாடத்தை நீக்க நடவடிக்கை எடுத்ததோடு, சம்பந்தப்பட்ட மொடியூலின் அனைத்து அச்சுப் பிரதிகளையும் முத்திரையிட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகையினால், எந்தவொரு மொடியூலும் பாடசாலை மாணவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை. இச்சம்பவம் குறித்து அமைச்சினால் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பு குறித்த கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம், எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,
எதிர்க்கட்சியினர் இந்தத் தேசியப் பணியையும் தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும், சமூகத்தில் பலரும் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துத் தவறுகளைத் திருத்தும் நோக்கில் நேர்மறையாகவே கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏற்பட்டுள்ள தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்தி கல்விச் சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகையினால், எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கல்விச் சீர்திருத்தம் பற்றிய உரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம், எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதிச் செயலாளர் வணக்கத்திற்குரிய முருத்தேனியே தம்மரக்கித்த தேரர், மகா விகாரைத் தரப்பின் பிரதிச் செயலாளர் மஹவெல ரதனபால தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான துஷாரி ஜயசிங்க, தனுர திஸாநாயக்க, கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் டி.டி. விமலவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





