பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாம் உறுதியளிக்கிறோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வுக்காகவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், இன்று டிசம்பர் 19 ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.

அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.

நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.

எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகி றோம்.

பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.

2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.

குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.

இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.

மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மாகாண சபைத் தேர்தல்களைக் கூடிய விரைவில் நடத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் விதிகளால் தடைப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (2025 டிசம்பர் 19) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரித்து, அதனைப் பொதுமக்களிடம் சமர்ப்பித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர், தேவையான மாற்றங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். தற்போது புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அதன் அடிப்படை எண்ணக்கருப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்ற ஆட்சி முறையை நிறுவுவதற்கும், நிறைவேற்று அதிகாரங்கள் அற்ற ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போதே முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க இயலாது. இந்த முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான குறிப்பிட்ட கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 3(ஆ) பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் எல்லை நிர்ணயக் குழுவினால் தேர்தல் தொகுதிகள் மற்றும் எல்லைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும்.

மேற்படி சட்ட விதிகளின் கீழ் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாமையே மாகாண சபைத் தேர்தலை இதுவரை நடத்த முடியாமல் போனதற்கான காரணமாகும். எனவே, எல்லை நிர்ணயத்தைப் பூர்த்தி செய்து தேர்தலை நடத்துவதா? அல்லது 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து தேர்தலை நடத்துவதா? என்பது குறித்துத் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். எவ்வாறாயினும், இச்செயற்பாடுகளின் இறுதியில் தேர்தலை நடத்துவதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அரச குற்றவியல் வழக்குத் தொடரகம் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு, Noritake Company Limited நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் ரூபா நிதியுதவி

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக, ஜப்பானின் நோரிடேக் (Noritake Company Limited) நிறுவனம் 20 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கென்ஜி ஒபாரா (Kenji Obara) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் 2025 டிசம்பர் 18ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான சுஜாதா எகொடகெதர, உதவிப் பொது முகாமையாளர் கப்டன் எம்.எம். அதுல ரோஹான் சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் கௌரவ வெங் டொங்மின் (Wang Dongming) அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 2025 டிசம்பர் 17ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட திரு. வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரதமரின் சமீபத்திய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த திரு. வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

விழுமியங்களைப் பாதுகாத்து, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி, அனுபவங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவைப்படுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்றது.

முப்படைகளுக்கான உயரிய இராணுவக் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், 19ஆவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 149 பயிற்சிப் பணியாளர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு Golden Owl Award, Golden Pen Award மற்றும் Commandant’s Honours ஆகிய மூன்று சிறப்பு விருதுகளைப் பிரதமர் வழங்கியதுடன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சஞ்சிகையின் (Defence and Security Journal) 10ஆவது பதிப்பு மற்றும் ’Owlet’ சஞ்சிகை என்பனவும் உத்தியோகபூர்வமாகப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்:

’தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து, பாரிய அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டமைக்காகப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தக் கற்கையில் வெளிநாட்டுப் பயிற்சிப் பணியாளர்களின் பங்குபற்றல், சர்வதேச அனுபவப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் தலைவர்கள் சட்டத்தை மதித்து, ஒழுக்க விழுமியங்களைப் பேணி, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொண்டு, கற்றல் அனுபவங்களுக்கமையச் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இராணுவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த போதிலும், சரியான தீர்மானத்தை எடுத்தல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தலைமைத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக என்றும் நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லூரியில் கட்டியெழுப்பப்பட்ட தொழில்சார் தொடர்புகள், எதிர்காலச் சமாதான நடவடிக்கைகள், மனிதாபிமானப் பணிகள், சர்வதேச பயிற்சிகள் மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், DSCSC இன் முன்னாள் கட்டளைத் தளபதிகள், தற்போதைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், ஏனைய கௌரவ விருந்தினர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 16ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும், சம்பள முரண்பாடுகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஆண்டில் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு