பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தொடர்ச்சியான ஆதரவு இலங்கை ஈரானிய இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவியது. - ஈரான் தூதுவர்

இருதரப்பு நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தனது இராஜதந்திர பதவிக்காலத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கியமைக்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் தூதுவர் ஹஷீம் அஷ்ஜசாதே தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் சவாலான காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் வழங்கிய ஆதரவைப் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (18) அலரி மாளிகையில் சந்தித்து விடைபெற்றுக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடினமான மற்றும் சவாலான காலகட்டத்தில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு தூதுவர் ஹஷீம் அஷ்ஜசாதே மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவுவதற்கான தூதுவரின் விசேட முயற்சிகள் மற்றும் இலங்கையின் நலனுக்காக ஈரான் மேற்கொண்டுள்ள முக்கிய கூட்டு முயற்சிகளை பூர்த்திசெய்வதை உறுதி செய்ய அவர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஈரான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் தூதரகப் பிரிவுத் தலைவர் கே. சுஹைல் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு