ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தைப் பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

இலங்கையில் ஊழலைத் தடுத்தல், புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்தல்களைப் பலப்படுத்துதல், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் திருத்தப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 19ஆம் திகதி பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தார்.

குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்த சட்டரீதியான மற்றும் வரையறைசார் சிக்கல்கள், சிங்கள மற்றும் ஆங்கில மொழி உரைகளுக்கிடையே நிலவும் இணக்கமின்மைச் சிக்கல்கள், ஊழல் புலனாய்வு மற்றும் வழக்குத் தொடர்தல் நடைமுறைகள் தொடர்பான சிக்கல்கள், ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல்கள், அத்துடன் மத்திய மயப்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமை ஊடாகச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிக்கையினைச் சமர்ப்பித்தல் தொடர்பில் இனங்காணப்பட்ட நடைமுறை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதே இத்திருத்தங்களின் முதன்மை நோக்கமாகும்.

இதன்மூலம், லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் கடமைகளுக்குத் தேவையான சட்டப் பின்னணியைப் பலப்படுத்துவதற்கும், சட்டத்தை மேலும் வினைத்திறன் மிக்க மற்றும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு