துருக்கி நாட்டின் தேசியக் கல்வி அமைச்சர் இலங்கைப் பிரதமரை சந்தித்தார்

துருக்கி குடியரசின் தேசியக் கல்வி அமைச்சர் கௌரவ யூசுஃப் தெகின் அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

அமைச்சரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே நிலவிவரும் நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு, குறிப்பாக பொருளாதாரம், உலக வர்த்தகம் மற்றும் கல்வித் துறைகளில் இருந்து வரும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார். அத்தோடு சந்திப்பின்போது, பிரதமர் துருக்கி முன்வைத்த புதிய கல்வித் திட்டத்தினைப் பற்றி எடுத்துரைத்தார்.

அத்தோடு இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்த கருத்துப் பரிமாறல்கள், கல்வி, உலக வர்த்தகம், தளவாடம், ஆற்றல், சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது துருக்கியின் தேசியக் கல்வி அமைச்சருக்கு, பிரதமருடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்ததற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை, குறிப்பாக கல்வித் துறைக்கான பங்களிப்பை பற்றி மீண்டும் வலியுறுத்திய துருக்கியின் தேசியக் கல்வி அமைச்சர், அமைதி மற்றும் மனித நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காக கல்வித் துறையில் ஒத்துழைப்பின் தேவையையும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

துருக்கி பிரதிநிதிகள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி, துருக்கி குடியரசின் தூதுவர் கௌரவ செமிஹ் லுத்ஃபு துர்குத், தேசியக் கல்வி அமைச்சின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் நாயகம் நல் எர்யில்மாஸ் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் செயலர் நாலக கலுவெவ, பிரதமரின் மேலதிக செயலர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு