போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கான தன்னார்வத் திட்டமொன்று மீண்டும் தேவை. - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஆசிரியர் நியமனங்களை வழங்கும் போது மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.09.26ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் நிர்வாக நிலைமையை மேம்படுத்தும் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது அவசியம். ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உள்ளூராட்சி நிறுவனங்களில் ஓராண்டுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களை நியமித்து மாகாண சபைகளின் பணிகளையும், பிரதேச செயலகங்களில் அபிவிருத்திக் குழுக்களை நியமித்து பிரதேச செயலக அதிகார எல்லையின் கீழ் வரும் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். மாவட்ட செயலாளர்களுடன் ஆளுநர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக, ஆளுநர்களிடம் விசேட அதிகாரங்கள் உள்ளன. அரச அதிகாரிகளும், ஆளுநர்களும் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பல்நோக்கு செயலணி ஊழியர்களுக்கு பணியிடங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்கு மாகாண சபைகளின் ஆதரவைப் பெற வேண்டும். இதை அரச திணைக்களங்களால் மட்டும் செய்ய முடியாது. சில மாவட்டங்களில் குறைந்தளவான இடங்களுக்கே நியமனம் செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு க.பொ.த சா. த இல்லை. என்.வி. கியூ விசேட பயிற்சிகள் அரசினால் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியை அங்கீகரிக்கும் இடங்களுக்கு அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் நியமனம் தொடர்பிலும் சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் அந்தந்த மாகாணங்களில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர் நியமனத் திட்டம் வெற்றிகரமாக அமையும். வேறு மாகாணத்திற்கோ மாவட்டத்திற்கோ அனுப்பப்படுவதால் அந்த ஆசிரியர்கள் பாடசாலைகளில் இல்லை. சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எங்களின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதே தவிர சலுகையளிக்கும் இடமாற்றங்களை வழங்குவது அல்ல. அரச ஆசிரியர் ஆட்சேர்ப்பு திட்டத்தின் ஊடாக அந்தந்த மாகாணங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புங்கள்.

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களினதும் வருமானத்தை அதிகரிக்க முடியும் என உள்ளூராட்சி அமைச்சு இனம்கண்டுள்ளது. இதற்கு விசேட கவனம் தேவை. நீதிமன்ற அபராதங்கள், முத்திரை வருவாய், வேறு பணிகள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு குறைவாகவே அனுப்பப்படுகின்றன. அபிவிருத்திக் குழுக்கள் இதில் கவனம் செலுத்தி செலவுகளைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சூரிய சக்தியிலான மின்சாரத்தை அதிகரிக்கும் கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால் இத்துறையில் முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது. திட்டங்களை நடைமுறைப்படுத்த மாகாண சபை மற்றும் மாவட்ட குழுக்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். உள்ளூராட்சி நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆளுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு செய்யப்படுவதும் மிகவும் முக்கியமானது.

சில சட்டவிரோத வருமான முறைகளை கவனிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகம் அதிகரித்துள்ளது. பொலிஸாருடன் இணைந்து மாகாண மட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்துங்கள். விரைந்து செயற்படாவிட்டால் பாதாள உலகக் கும்பல் கொலை கலாசாரம் எங்கே போய் முடிவடையும் என்று தெரியவில்லை. இந்த நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும். போரின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன. அத்தகைய ஒரு தன்னார்வத் திட்டம் மீண்டும் தேவை. அதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் இதைப் புரிந்து கொண்டு இந்த போதைப்பொருள் தடுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த நிலைமையை விரைவாகக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர், பொதுமக்கள் அமைப்புகள், மதத் தலைவர்களுடன் கலந்துரையாடுங்கள்.

பாடசாலையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பிள்ளையும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது. அவர்கள் தொழிற்கல்விக்கு அனுப்பப்பட வேண்டும். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்திற்கு அவர்களை வழிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள். மாவட்ட மட்டத்தில் ஆர்வம் காட்டுங்கள். அப்படி இல்லாத போது, இந்த பிள்ளைகள் ஒவ்வொரு கும்பல்களில் போய் இணைகிறார்கள். இளம் பிள்ளைகளை எதிர்கால திட்டங்களுக்கு வழிநடத்துங்கள்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச அல்லது அரசு சம்பந்தப்பட்ட தோட்டக் காணிகள் அல்லது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நிலங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன. இந்த நிலங்களில் குறுகிய காலத்திற்கு இளைஞர்கள் விவசாயம் செய்ய அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்தது. இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, ஆளுநர்களான மஹிபால ஹேரத், விலீ கமகே, லலித் யூ. கமகே, ஏ. ஜே. முஸம்மில், ரொஷான் குணதிலக்க, பி. எம். எஸ். சார்ள்ஸ், செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க, பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் அனைத்து மாகாண பிரதம செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு