வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார பேரவை...

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார பேரவையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அஹமட் பின் அலி சயேக்கை நேற்று (11) அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

வர்த்தகம், எரிசக்தி, உபசரிப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கும், பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்காக உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்கவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

ஏற்றுமதிக்கான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்காக புதிய பொருளாதார வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயம் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தற்போது கிடைத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் சுமார் மூன்று இலட்சம் இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காகவும் ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் இரு நாடுகளினதும் பொருளாதாரத்திற்கு வளமாக திகழ்வதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுக்குழுவில் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி, இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் சுல்தான் அல் மன்சூரி மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் Ghada Al Nabulsi ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு