ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “ரதுவேவி மிஹிமடல” நூல் வெளியீட்டு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் ஆகஸ்ட் 28ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து, வாசுதேவ நாணாயக்கார தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “வாசுதேவ நாணாயக்கார இலங்கை அரசியலில் ஒரு முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, இடதுசாரி அரசியலில் பல வலுவான ஆளுமைகள் இருந்துள்ளனர். அந்த இடதுசாரி அரசியல் தாக்கம் நாடு இன்றுள்ள நிலையை அடைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது. அரசியல் ரீதியாக நாம் இணங்கிய விடயங்களும், இணங்காத விடயங்களும் இருந்தன. எனினும், வாசுதேவ என்ற ஆளுமை இடதுசாரி அரசியலுக்காக ஆற்றிய சேவைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.
2020ஆம் ஆண்டு நான் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தபோது வாசுதேவ சகோதரரும் பாராளுமன்றத்தில் இருந்தார். நாங்கள் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமானதும் சுவாரஸ்யமானதுமான பல விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். அவை தொடர்பான குறிப்புகள் இந்த நூலிலும் இடம்பெற்றிருக்கும் என நான் நினைக்கிறேன்.” என பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர்களான கரு ஜயசூரிய மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், வாசுதேவ நாணாயக்கார அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு