உலகளவில் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான இலக்குகளை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக முன்னோக்கிச் செல்லும் அதேவேளை, உலகெங்கிலும் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான இலக்குகளை மேம்படுத்துவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை சங்கத்தினால் 2023.09.23 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவின் 77வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர், ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியா பொருளாதார அபிவிருத்தியில் முன் நிற்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திர தினம் வரலாற்றுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறியதை நினைவுகூர்ந்த பிரதமர், எமது நிகழ்காலத்தை மதிப்பிடுவதற்கும் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கும் இது ஒரு வாய்ப்பு என்றார். இன்று இந்தியா உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தை மீண்டும் பெற்றுள்ளது மட்டுமின்றி, சர்வதேச அமைப்பிலும் தனது நிலையை உயர்த்தியுள்ளது என்று தோன்றுகிறது. உலகம் முழுவதும் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான இலக்குகளை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கெளரவ அதிதியான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையில் ஆழமாக வேரூன்றிய பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளின் பன்மைத்துவம் பற்றி வலியுறுத்தினார். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இந்திய இலங்கை சங்கம் போன்ற அமைப்புக்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டினார். இலங்கையும் இந்தியாவும் ஒரே புராதன கலாசாரத்தின் பிள்ளைகள் என்பதாலும், இரு நாடுகளுக்கும் பொதுவான கலாசார உறவுகள் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு இந்தியா உதவும் என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இந்திய இலங்கை சங்கத்தின் தலைவர் கிஷோர் ரெட்டி, மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவும் கலாச்சார உறவும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் முக்கிய தூண்களில் ஒன்று என்று வலியுறுத்தினார். இந்த முன்னேற்றம், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் ஒருங்கிணைப்புக்கு வழிவகுப்பதுடன், அறிவுப் பகிர்வு, பன்முகத்தன்மை மற்றும் பொதுவான சுபீட்சம் ஆகியவற்றை வளர்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரேணுகா ஏகநாயக்க சிறப்புரையாற்றினார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு