பாடசாலை கல்வியை இடை நடுவே விட்டுச்செல்லும்பெருமளவான பிள்ளைகள் உள்ளனர். ஆனால், நாம் பரீட்சையில் சித்தி பெறும் பிள்ளைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். - பிரதமர் தினேஷ் குணவர்தன.

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்களுக்கு சட்ட ரீதியான தடைகள் இருக்குமானால் அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

18 வயதை அடைந்ததுமே சிறுவர் இல்லங்களில் இருந்து சிறுவர்களை வெளியேற்ற முடியாது. - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, உலக சிறுவர் தின நிகழ்வு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நேற்று (01) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தலையிட்டு, அதற்காக பல திட்டங்களை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்தவும், பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சிறுவர்களை பாதுகாக்கவும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த நடவடிக்கைகளை மேம்படுத்த, தேவையான மேலதிக பாதுகாப்புகள் மற்றும் ஆதரவினை வழங்குவது அவசியம்.

பிள்ளைகளுக்கு சமூகத்தில் வாழ்வதற்கான உரிமைகளுக்கும் எதிர்கால சமுதாயத்தில் குடிமக்களாக அவர்கள் ஆற்றக்கூடிய பங்கிற்கும் எந்த தடைகளும் இருக்க முடியாது. அப்படி சட்ட தடைகள் இருந்தால் அந்த தடைகளை மாற்ற வேண்டும்.

அதற்கு, அரசு என்ற வகையில், தேவையான முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. தனியார் துறையினால் அதன் வருமானத்தில் இருந்து சிறுவர்களின் நலனுக்காக பெருமளவில் நன்கொடைகள் ஒதுக்கப்படுகின்றன. அதற்கு எமது நன்றிகள்.

சுமார் 50 லட்சம் பிள்ளைகளுக்காக நாம் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. பாடசாலை கல்வியை விட்டுச் செல்லும் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையானவர்கள் உள்ளனர். ஆனால் நாம் பரீட்சையில் சித்தியடையும், தோல்வி அடையும் பிள்ளைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்.

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய சட்டங்களை மேலும் வலுப்படுத்த அமைச்சர் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

எமது நாட்டில் சிறுவர் திரையரங்குகள் இல்லை. அவ்வாறான ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். பாரிய திரையரங்குகள் தேவையில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் மாகாண சபைகளுடன் இணைந்து இவ்வாறான திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம், பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கான மற்றுமொரு வாயிலை நாம் திறந்து வைக்க முடியும்."

இங்கு உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க...

சிறுவர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒக்டோபர் முதலாம் திகதி மட்டும் சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுவதாக சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இல்லை . வருடத்தில் 365 நாட்களும் நாம் சிறுவர்களைப் பாதுகாக்கிறோம். அவர்களுக்காக எப்போதும் நாம் முன்நிற்கிறோம்.

முன்பள்ளிப் பாடசாலைகள் மாற்றாந் தாய் மனநிலையில் வைத்து நோக்கப்படும் நிலை உள்ளது. இலங்கையில் முன்பள்ளிப்பாடசாலைகள் ஒருபோதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. ஒவ்வொருவரும் விரும்பும் இடத்தில் விரும்புகின்றவாறு முன்பள்ளிகளை ஆரம்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றியுள்ளோம்.

பாடசாலை பிள்ளைகள் ஒவ்வொரு மாதமும் உடல்நலக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். சிலர் அந்த நாட்களில் பாடசாலைகளுக்கு செல்வதில்லை. இந்த பிள்ளைகளுக்கு தேவையான சுகாதார நப்கின்களை கல்வித்திணைக்களத்தின் ஊடாக குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். 18 வயது ஆனவுனேயே அவர்களை வெளியில் அனுப்பிவிட முடியாது. அதற்கான வேலைத் திட்டமொன்றை வகுக்க வேண்டும்”.

சிறுவர் தின முத்திரையொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சிறுவர் நிகழ்ச்சிகள், கௌரவிப்புகள், சான்றிதழ்கள் வழங்குதல், பரிசில்கள் வழங்குதல் ஆகிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, அமைச்சின் செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு