புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வலயக் கல்வி அலுவலகங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்துவது அரசாங்கத்தினால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் இலக்காகும்

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வலயக் கல்வி அலுவலகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உரிய முறையில் பயன்படுத்துவது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஓர் இலக்காகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதமர், நவம்பர் 15ஆம் திகதி இதனைக் குறிப்பிட்டார்.

திருக்கோவில் விஸ்வ துலசி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர், அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார். கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இப்பாடசாலையின் பழைய கட்டடங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பின்னர் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர், அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்:

"எங்களால் மிகச் சிறந்த பாடத்திட்டமொன்றைத் தயாரிக்க முடியும்; எனினும், அது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவது பாடசாலை மட்டத்திலேயாகும். அதற்குத் திறமையான ஆசிரியர்கள், அதிபர்கள், வசதிகள் ஆகியவற்றுடன் மாகாண, வலய மட்டத்திலான சிறந்த நிர்வாகக் கட்டமைப்பும் அத்தியாவசியமானவை.

திட்டமிட்ட புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பாடத்திட்டத்தை மாற்றுவது மாத்திரமன்றி, ஆசிரியர் பயிற்சி, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்துப் பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் வலயக் கல்வி அலுவலகங்கள் சிறப்பானதொரு வகிபாகத்தை ஆற்றுகின்றன. அந்த அலுவலகங்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் இருப்பதையும் நாங்கள் அறிவோம். குறிப்பாக, வலயக் கல்வி அலுவலகங்களில் அதிகாரிகள், வசதிகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பாடசாலைகளுக்குப் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டபோதிலும், சில வலய அலுவலகங்களில் முறையான கணினி வசதிகள்கூட இல்லை.

எனவே, வலயக் கல்வி அலுவலகங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது வலயக் கல்வி அலுவலகங்களின் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் அதற்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்திலும் அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இவற்றுக்கு மேலதிகமாக, வசதிகளை வழங்கும் முதற்கட்டத்தின் கீழ் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்காக 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், எதிர்காலப் பணிகளுக்காக மேலதிக நிதியையும் ஒதுக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு வலய அலுவலகங்களுக்கு இயலுமை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இணையவழி (Online) முறைமையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த இணையவழி முகாமைத்துவ முறைமையின் (NEMIS) மூலம் தற்போதும் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்காலத்தில் மாணவர்களின் விவரங்களும் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆசிரியர்கள் ஆவணங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, குறித்த மதிப்பீட்டு முறையையும் இணையவழியாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைக் கண்காணிப்பதும் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இலகுவானதாக அமையும். எதிர்வரும் ஆண்டில் 6ஆம் தரத்திற்குக் கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், புதிய மதிப்பீட்டு முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு நாம் தயாராகி வருகிறோம். அதற்குத் தேவையான கணினிகள், இணைய வசதிகளை வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் இதற்கு முன்னர் இலங்கையிலேயே நான்காவது இடத்தைப் பெற்றிருந்தது. இந்த நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றதன் மூலம் அந்த இடம் முதலாமிடமாக மாற வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மாத்திரமன்றி, அனைவருமே இந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் பங்காளிகளாக மாற வேண்டும். கல்வி அமைச்சினால் மாத்திரம் இவற்றை மேம்படுத்த முடியாது. 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். 2027 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது, வழங்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படாதவாறு, பாடசாலைகளின் தேவைகளைச் சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள். அனைவரும் இணைந்து, ஆசியாவிலும் உலகிலும் மிகச் சிறந்த கல்வியாக எமது நாட்டின் கல்வியை உருவாக்குவதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.”

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, அபூபக்கர் ஆதம்பாவா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் உள்ளிட்ட கல்விசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு