பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் (RCEP) இலங்கை பிரவேசிப்பதற்கு மலேசியா ஆதரவு...

பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் இணையும் இலங்கையின் கோரிக்கைக்கு மலேசியா ஆதரவளிக்கும் என்று மலேசிய வெளிவிவகார அமைச்சர் Dato Seri Diraja Dr Zambry Abd Kadir தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மலேசிய வெளிவிவகார அமைச்சர் Dato Seri Diraja Dr Zambry Abd Kadir அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2023.10.09) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் (RCEP) இலங்கையின் பிரவேசம் பரந்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். "இலங்கை எங்கள் பிராந்தியத்திற்கு சொந்தமானது" என்று குறிப்பிட்ட மலேசிய அமைச்சர் அதற்கு இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். இந்தப் பொருளாதார தொலைநோக்குப் பார்வையின் முன்னேற்றத்திற்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அறிவித்த பிரதமர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) எதிர்கால தொலைநோக்குப் பார்வையுடன் இது இணைந்திருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்து சமுத்திர பிராந்திய சங்கம் (IORA) போன்ற பிராந்திய குழுக்களின் ஒத்துழைப்பில் விசேட கவனம் செலுத்தி இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் வளர்ந்து வரும் சுற்றுலா, கல்வி மற்றும் மருந்துத் தொழில் துறைகளில் முதலீடு செய்ய முன்வருமாறு மலேசிய தொழில்முயற்சியாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் 6வது மிக உயர்ந்த முதலீட்டு பங்காளியாக மலேசியா உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மலேசிய அரசாங்கம் அளித்த ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இலங்கையுடனான உயர்மட்ட உறவுகள், வரலாற்று உறவுகள், மனித உறவுகள் மற்றும் ஆழமான நட்புறவைக் குறிப்பிட்ட மலேசிய அமைச்சர், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மலேசியத் தூதுக்குழுவின் உதவிச் செயலாளர்கள் டத்தோ சையத் மொஹமட் பக்ரி சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் அஹமட் கம்ரிஸாமில் ரெசா, உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆதம், இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுரா திஸாநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு