ஆராய்ச்சிக் கலாசாரத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்

ஆர்வம், கற்றல் சுதந்திரம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் வலுவான ஆராய்ச்சிக் கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க வேண்டும் என3 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இரத்மலானையில் அமைந்துள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்ற 19ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுந்து இயல்புநிலைக்குத் திரும்பும் எதிர்காலத்திற்காக நிர்வாகம், உட்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வதே இம்முறை மாநாட்டின் பிரதான கருப்பொருளாகும்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நெருக்கடிகளின்போது அதிகளவில் பாதிக்கப்படுவது சமூகத்தில் உள்ள பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களே எனவும், நாட்டின் எதிர்கால வலுவான தன்மையானது அனைத்து மக்களையும் வலுப்படுத்தும் நீதியான சமூகமொன்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அத்துடன், இயற்கை அனர்த்தங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட புதிதாக முகிழ்த்துவரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தேசியப் பாதுகாப்பு தொடர்பான கருத்தாக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், ’டிட்வா’ சூறாவளி போன்ற அனர்த்த சந்தர்ப்பங்களில் முப்படையினரும் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பினுள் சவாலான கேள்விகளைக் கேட்பதற்கும் அறிவுசார் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல், அவற்றின் ஒழுக்கவியல் மற்றும் சமூகத் தாக்கங்களை இனங்கண்டு, பகுப்பாய்வுச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை ஏனைய நாடுகளின் தொழில்நுட்பங்களை வெறுமனே பயன்படுத்துபவராக இராமல், உள்நாட்டு முன்னுரிமைகளுக்கு அமைவாகப் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு உலகளாவிய அறிவிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த, KDU இன் உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜீ.யு. தம்மிக குமார உள்ளிட்ட முப்படை சிரேஷ்ட அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு