சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார மறுமலர்ச்சிக்கான இலங்கைத் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது - ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர்

நாணயத் துறைகளில் சீர்திருத்தங்கள் மூலம் விரைவான பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான இலங்கைத் தலைமைத்துவத்தின் பலம் மற்றும் அதன் அர்ப்பணிப்பினால் சர்வதேச நாணய முகவர் நிலையங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளன என ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சிக்ஸன் சென் (Shixen Chen) தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 5) பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய விஜயமானது அடுத்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டங்களை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மற்றும் நிதி சவால்களை சமாளிப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு தொடர்பில் உறுதியளித்தார்.
பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கும், நிதித் துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கும் சக்தி வளம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் துறைகளை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய, பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், மிகை ஏற்றுமதியை அதிகரிக்கவுமான கிராமிய விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் விளக்கினார்.
திட்ட ஒத்துழைப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்ப உதவியையும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்க முடியும் என்று திரு Shixen Chen கூறினார்.
கோவிட் தொற்றுநோய் நிலைமைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் போது வழங்கப்பட்ட அவசர உதவி கடன்கள் மற்றும் மானியங்களுக்காக பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றி தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி உதவித் திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும், விவசாயிகள் உட்பட ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதிலும் அரசாங்கத்திற்கு முக்கிய ஆதரவை வழங்குவதாக அவர் கூறினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியானது அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், நீர் சுத்திகரிப்புக்கான பொருட்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செயற்பாட்டு மூலதனம் போன்ற உடனடித் தேவைகளை தற்போதைய கடன்களிலிருந்து உபரியான கடன் தொகையை மீள் ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்து வருகிறது.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட ஆலோசகர் அமிங் ஷோ, பொருளாதார ஆலோசகர் ராணா ஹசன், இலங்கைக்கான பணிப்பாளர் சென் சென், சிரேஷ்ட அதிகாரிகள் அமினுர் ரஹ்மான் மற்றும் சந்தோஷ் பொக்கரேல் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.